Images
  • PIEVIaduct
    (படம்: TODAY)

தீவு விரைவுச்சாலை பாலம் இடிந்துவிழுந்த சம்பவம் - கட்டுமானக் கோளாறுகளைத் தெரிவிக்கத் தவறிய பொறியாளருக்குச் சிறை


தீவு விரைவுச்சாலை மேம்பாலத்தில் இருந்த வடிவமைப்புக் கோளாறுகள், கட்டட விரிசல்களைத் தெரிவிக்கத் தவறிய பொறியாளருக்கு 86 வாரம் அதாவது சுமார் ஓராண்டு, 9 மாதச் சிறைத்தண்டனையும் 10,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.

2017 ஜூலை 14 அதிகாலையில் தம்பனீஸ் விரைவுச்சாலையிலிருந்து தீவு விரைவுச்சாலை, அப்பர் சாங்கி ரோடு ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

பாலத்தின் மேலிருந்த 11 ஊழியர்கள் 9 மீட்டர் கீழே விழுந்தனர்.

விபத்தில் ஒருவர் மாண்டார். மற்றவர்கள் காயமடைந்தனர்.

விபத்தின் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் பொறியாளரான 46 வயது ராபர்ட் அரியாந்தோ ஜாந்த்ரா (Robert Arianto Tjandra).

சிந்திக்காமல் செயல்பட்டு மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவித்தது, கட்டுமானத் தளத்தில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது, அங்கீகாரம் இன்றி கட்டுமானப் பணிகளுக்கு ஒப்புதல் தெரிவித்தது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

 

Top