Images
  • pm lee
    (படம்: Facebook/Leong Sze Hian)

பிரதமர் லீ வலைப்பதிவாளர்மீது அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்

பிரதமர் லீ சியென் லூங், இணையத்தில் பகிரப்பட்ட அறிக்கை ஒன்றுக்காக அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கையில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்கிற்குத் திரு.லீ உதவியதாகக் கூறப்பட்டிருந்த அறிக்கையை வலைப்பதிவாளர் லியோங் ஸு ஹியன் (Leong Sze Hian) இணையத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்த அறிக்கை முதலில் கடந்த மாதம் States Times Review இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பதிவினை 65 வயது திரு.லியோங் Facebookஇல் பகிர்ந்திருந்தார்.

பிரதமர் லீயின் வழக்கறிஞர்கள் திரு.லியோங்கிற்கு அனுப்பிய கடிதத்தில் அந்தப் பதிவு அவதூறான குற்றச்சாட்டுகளைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

திரு. லியோங்கின் Facebookஇல் உள்ள ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் அந்தப் பதிவைக் காணமுடிந்ததையும் அது சுமார் 18 முறை பகிரப்பட்டதையும் வழக்கறிஞர்கள் சுட்டினர்.

கடிதம் கடந்த மாதம் 12ஆம் தேதி திரு லியோங்கிற்கு அனுப்பப்பட்டது. மூன்று நாட்களுக்குள் மன்னிப்புக் கடிதத்தை வெளியிடும்படியும் சேதத்துக்கான இழப்பீட்டுத் தொகை குறித்து எழுதும்படியும் வழக்கறிஞர்கள் கேட்டிருந்தனர்.

நேற்று முன் தினம் அது குறித்து திரு. லியோங் தமது Facebookஇல் பதிவு செய்திருந்தார்.

தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த மாதம் பத்தாம் தேதியே அந்தப் பதிவை அகற்றிவிட்டதாக அவர் சொன்னார்.

பல்வேறு தலைப்புகள் குறித்து அன்றாடம் வலைப்பதிவிடும் திரு.லியோங் தாம் எந்தக் கருத்துகளையும் வெளியிடவில்லை என்றும் பதிவைப் பகிர மட்டுமே செய்ததாகவும் கூறினார்.

பிரதமர் லீயின் பத்திரிகைச் செயலாளர் அவதூறு வழக்கு போடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார்.

வழக்குக்கு முந்திய விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Top