Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தனிநபர் நடமாட்டச் சாதன விபத்துகளைக் குறைக்க வயது வரம்பு உதவுமா? - பொதுமக்கள் கருத்து

தனிநபர் நடமாட்டச் சாதனம் தொடர்பான விபத்துகளைக் குறைக்க எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் போதும் என்கின்றனர் பொதுமக்கள்.

வாசிப்புநேரம் -

தனிநபர் நடமாட்டச் சாதனம் தொடர்பான விபத்துகளைக் குறைக்க எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் போதும் என்கின்றனர் பொதுமக்கள்.

இளையர்களிடம் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் விற்பது குறித்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

அறிவிப்பைப் பற்றிய பொதுமக்களின் கருத்தைச் 'செய்தி' திரட்டியது.

'செய்தி'யிடம் கருத்து தெரிவித்த பொதுமக்களில் பெரும்பாலானோர் புதிய கட்டுப்பாடுகளை வரவேற்றனர். ஆனால் வயதைக் காட்டிலும் மற்ற கட்டுப்பாடுகளும் அறிமுகப்படுத்துவது முக்கியம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

வயது வரம்பு விதிப்பது உதவும் என்று நினைக்கிறேன். ஆனால் நான் இதுவரை எதிர்கொண்ட பொறுப்பற்ற தனிநபர் நடமாட்டச் சாதன ஓட்டுநர்கள் அனைவருமே இளையர்கள் அல்லர்.

இதனால் மற்ற வகை விதிமுறைகளை அறிமுகப்படுத்துவது சிறந்தது என்று நினைக்கிறேன். அதே வேளையில் உணவு விநியோகம் செய்யும் துறையில் இருப்பவர்களைப் பாதிக்காத விதத்திலும் விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படவேண்டும்.

- மதுமிதா

பொதுவாக 'செய்தி'யிடம் பேசிய இளையர்களிடம் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் இல்லை. 

என்னிடம் தனிநபர் நடமாட்டச் சாதனம் இல்லை. ஆனால் இருந்தால் பள்ளிக்கும் மற்ற இடங்களுக்கும் செல்ல வசதியாக இருக்கும். பெற்றோர் என்னை வெளியில் அழைத்துச் செல்ல முடியாதபோது நான் சாதனத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வயதின் அடிப்படையில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இளையர்களுக்குச் சாதனங்கள் உதவியாக இருக்கும். நாங்களும் பொறுப்புடன் நடந்துகொள்வோம்.

- ஜஹினத்துன்னிஸா ஜியாவுதீன், 14 வயது

என்னிடம் தனிநபர் நடமாட்டச் சாதனம் இல்லை. பெற்றோரை அழைத்துச் சென்றால் மட்டும்தான் சாதனத்தை வாங்கமுடியும் என்றால் அது அவர்களுக்கு அசௌகரியமாக இருக்கலாம்.

- வனிதா, 14

பெரும்பாலான பெற்றோர் பிள்ளைகளுக்குத் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை வாங்கிக்கொடுப்பதில் உடன்பாடு தெரிவிக்கவில்லை. 

கட்டுப்பாடுகள் அவசியம். பிள்ளைகள் அதிக வேகத்தில் சாதனங்களைச் செலுத்துவார்கள். தலைக் கவசம் அணியமாட்டார்கள். இதனால் விபத்துகள் நேரிடக்கூடும்.

- பத்ருன்னிஸா அப்துல் மஜீது, பெற்றோர் 

பிள்ளைகளின் பாதுகாப்பு, தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் பாதிக்கப்படுகிறது. விதிமுறைகள் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதற்கு உறுதியில்லை. தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சாதனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். வயது மட்டுமல்ல, வேகக் கட்டுப்பாடுகளும் வலியுறுத்தப்படவேண்டும்.

- ஹைனூன் ஹுசெய்ன், பெற்றோர்  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்