Images
  • states times
    (படம்: Screengrab)

இரண்டு Facebook பக்கங்களுக்குத் திருத்த உத்தரவு பிறப்பிக்கும்படி POFMA அலுவலகத்திற்கு ஆணை

இணையத்தில் பொய்த் தகவலைப் பரப்புவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் POFMA அலுவலகத்திற்கு, இரண்டு Facebook பக்கங்களுக்குத் திருத்த உத்தரவு பிறப்பிக்கும்படி, வெளியுறவு அமைச்சருக்கான மாற்று அதிகாரத்துவ அமைப்பு ஆணையிட்டுள்ளது.

‘State News Singapore’ இன் Facebook பக்கம், திரு. அலெக்ஸ் டான் (Alex Tan) என்பவரின் Facebook பக்கம் இரண்டின் தொடர்பில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Facebook நிறுவனத்திற்கும் திருத்த உத்தரவு பிறப்பிக்கும்படி அதிகாரத்துவ அமைப்பு, POFMA அலுவலகத்தைக் கேட்டுக்கொண்டது.

‘State News Singapore’ இன் Facebook பக்கத்தில், சிங்கப்பூருக்கும், மலேசியாவிற்கும் இடையிலான போக்குவரத்து ஏற்பாடுகள் பற்றித் தவறான தகவல்கள் பதிவிடப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தத் தகவலைத் திரு. டான் தமது பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இரு பக்கங்களும் திருத்தத்தை வெளியிடுவதுடன், உண்மையான தகவலைப் பெறுவதற்கான இணைப்பையும் பதிவேற்றவேண்டும். அவை முன்னர் வெளியிட்ட பதிவை நீக்கவோ, திருத்தவோ தேவையில்லை. அவற்றின் மீது குற்றவியல் தடை ஏதும் விதிக்கப்பட மாட்டாது.

பொதுநலத்தை பாதிக்கக்கூடிய தகவல்கள் அந்தப் பதிவுகளில் இடம்பெற்றதால், Facebook நிறுவனத்துக்கு அதுகுறித்துத் தெரிவிக்கப்பட்டது. அதன் கீழ், அந்நிறுவனம் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர்கள் தவறான தகவல் பதிவேற்றத்தைக் காண நேரிட்டால், திருத்த உத்தரவையும் அவர்கள் பார்க்க வகைசெய்வது Facebookஇன் பொறுப்பு.

சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியென் லூங், இரு நாட்டுக்கிடையில் தினசரிப் போக்குவரத்தை அனுமதிக்கும்படி விடுத்த அழைப்பை மலேசிய அதிகாரிகள் நிராகரித்ததாக அந்தப் பதிவு தெரிவித்தது.

 

Top