Images
  • crime (2)
    கோப்புப் படம்: Jeremy Long

மோசடி நபர்கள், ரொக்கம் கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தில் 85 பேரிடம் காவல்துறை விசாரணை

மோசடி நபர்கள், ரொக்கம் கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தில் 85 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இம்மாதம் 27ஆம் தேதிக்கும் 29ஆம் தேதிக்கும் இடையே நடத்தப்பட்ட மூன்று-நாள் அதிரடிச் சோதனையில் 56 ஆடவர்களும் 29 பெண்களும் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

112 மோசடிச் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தப்பட்ட அந்த நபர்கள் 716,000 வெள்ளிக்கும் அதிகமாக ஏமாற்றியதாய் நம்பப்படுகிறது.

குற்றச்செயல் கும்பல்களின் சார்பில் சட்டவிரோத நிதியைப் பெற்றது, பணமாற்றம் செய்தது போன்ற நடவடிக்கைகளில் சந்தேக நபர்கள் ஈடுப்பட்டதாகக் கூறப்பட்டது.

அவர்களின் சிலர் இணைய விற்பனையாளர்கள் போல் நடித்து, வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தியதுடன் பொருளைக் கொடுக்காமல் தலைமறைவாகியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுற்றுலாத் தலங்களுக்கான நுழைவுச் சீட்டுகள், கைத்தொலைபேசி, ஹோட்டல் அறைப் பதிவுகள் போன்றவற்றை விற்பதாக மோசடி செய்யப்பட்டது.

மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது ஆகிய குற்றங்களின் அடிப்படையில் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.

மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுச் சிறைத்தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படலாம்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுச் சிறைத்தண்டனையுடன் அரை மில்லியன் வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.
 

Top