Images
  • bicycle
    படம்: Amir Yusof

பகிர்வு சைக்கிள்களை நிறுத்த QR குறியீட்டைப் பயன்படுத்தாதவர்களுக்கு அபராதம் - மக்களின் கருத்து என்ன?

சிங்கப்பூரில், பகிர்வு சைக்கிள்களை நிறுத்த இனி QR குறியீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டிலிருந்து இந்த மாற்றம் அறிமுகம் காணவுள்ளது.

QR குறியீட்டு முறையைப் பயன்படுத்தாமல் பகிர்வு சைக்கிள்களை நிறுத்தும் பயனீட்டாளர்களுக்கு 5 வெள்ளி கட்டணம் விதிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது.

இந்த அபராதம் போதுமானதா என்பதை வாசகர்களிடம் செய்தி கேட்டறிந்தது. கருத்துக்கணிப்பில் 54 விழுக்காட்டினர் அது போதுமானது என்று கூறினர். 46 விழுக்காட்டினர் இல்லை என்று கூறினர்.


இது குறித்து பொதுமக்கள் என்ன கூறுகின்றனர்?

முறையாக சைக்கிள்களை நிறுத்தாமல் அவற்றை கண்ட இடங்களில் நிறுத்தும் பிரச்சினைக்கு இந்த புதிய மாற்றம் தீர்வாக இருக்கும்

என்று 33 வயது விக்னேஷ்வரன் குணசேகரன் திடமாக நம்புகிறார்.

புதிய விதிமுறையை மீறுவோருக்கு $5 அபராதம் விதிப்பது போதுமானதே என்றும் அவர் கூறுகிறார்.

பகிர்வு சைக்கிள்களின் இடத்தை நிறுவனங்கள் QR குறியீடுகளின் மூலம் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். மேலும், சைக்கிள்கள் முறையாக நிறுத்தப்பட்டால் மற்ற பயனீட்டாளர்கள் அவற்றை எளிதாகக் கண்டுபிடித்து பயன்படுத்த முடியும்

என்றார் திரு விக்னேஷ்வரன்.

சைக்கிள்களை முறையாக நிறுத்தாத பயனீட்டாளர்களுக்கு அபராதம் விதிப்பது நல்லது என்றாலும் இந்தப் புதிய விதிமுறை பயனீட்டாளர்களிடையே புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயமில்லை

என்றார் ராஜ்கிரன் ராஜசேகரன்.

அந்த மாற்றத்தைக் கொண்டுவர பயனீட்டாளர்களின் மனப்போக்கு மாறவேண்டும். நிறுத்தப்படவேண்டிய இடங்களின் கட்டமைப்பும் சரியாக இருக்கவேண்டும்

என்று அவர் கருத்துரைத்தார்.

தற்போது சைக்கிள்கள் நிறுத்தும் இடங்கள் மிகவும் சிறிதாக உள்ளன என்றும் நிறுத்தி வைக்கவேண்டிய இடங்கள் அனைத்திலும் அடுக்குகள் தேவை என்றும் அவர் பரிந்துரைத்தார்.

அவ்வாறு இல்லை என்றால் பயனீட்டாளர்கள் சரியான இடங்களில் நிறுத்துவார்களே தவிர அவர்கள் சைக்கிள்களை ஒழுங்கான முறையில் நிறுத்தமாட்டார்கள் என்பதே 24 வயது திரு ராஜ்கிரனின் வாதம்.

மலிவான கட்டணத்தில் சைக்கிள் பகிர்வுச் சேவைகள் வழங்கப்படுவதால் 26 வயது ரஸ்மியா பானு யாக்கோப், அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

ஆனால், சரியாக சைக்கிளை நிறுத்தாததற்காக விதிக்கப்படும் அபராதம் சேவையின் கட்டணத்தை விட அதிகம் என்பதால் தாம் அதனைப் பயன்படுத்தாமல் இருக்கக்கூடும்

என்று அவர் குறிப்பிட்டார்.

தம்மைப் போலவே பலரும் சிந்திப்பார்கள் என்று அவர் நம்புகிறார்.

எனினும், கண்ட இடங்களில் சைக்கிள்களை நிறுத்தாமலிருக்க பயனீட்டாளர்களின் மனப்போக்கு மாறவேண்டும் என்று அவர் கூறுகிறார்.

அதற்கு, நிறுவனங்கள் அவகாசம் அளிக்கவேண்டும் என்றார் அவர்.


Top