Images
  • replica guns (1)
    (படம்: Singapore Police Force)

156 மாதிரித் துப்பாக்கிகள் வைத்திருந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

மாதிரித் துப்பாக்கிகளை விற்பனை செய்யும் தொழிலை நடத்தியதாக ஆடவர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர் அந்தத் துப்பாக்கிகளையும் அவை தொடர்பான பாகங்களையும் Carousell தளத்தில் விற்றதாகவும், அத்தகைய ஒரு துப்பாக்கியை Grab ஓட்டுநர் மூலம் ஓர் ஆடவருக்கு அனுப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இன்று, 41 வயது லியூ ஹுய்ஜியென் (Liu Huijian) மீது துப்பாக்கி ரவைகளைச் சுடக்கூடிய 156 துப்பாக்கிகளையும் துப்பாக்கிப் பாகங்களையும் உரிமமின்றி வைத்திருந்த ஒரு குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

புளோக் 53, சிம்ஸ் பிளேசில் (Block 53, Sims Place) உள்ள அவருடைய வீட்டில் 9 "Desert Eagle", 4 "M4A1" மாதிரித் துப்பாக்கிகள் உட்பட பல பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், இறக்குமதி உரிமமின்றி மாதிரித் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தது, 158 துப்பாக்கிகளை இறக்குமதி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்குகிறார்.

லியூ, மின்கலம், ஸ்பிரிங் ஆகியவற்றில் இயங்கும் துப்பாக்கிகளையும் அதற்கான பொருள்களையும் மறுவிற்பனை செய்யும் தொழிலை நடத்தியதாக அரசாங்க வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

அவை ஆயுத, வெடிபொருள் சட்டத்தின் கீழ் வரும்.

அத்தகைய துப்பாக்கி ஒன்றை லியூ Grab ஓட்டுநர் மூலம் விநியோகிக்க முயற்சி செய்தார். அதை நிராகரித்த ஓட்டுநர் Grab நிறுவனத்திடம் தகவல் அளித்தார்.

பின், வாக்குமூலம் அளிக்குமாறு அங் மோ கியோ காவல் நிலையத்திடமிருந்து அந்த ஓட்டுநருக்கு அழைப்பு வந்தது.

துப்பாக்கிகள் வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், லியூவிற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ 5,000 வெள்ளி வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

Top