Images
  • restaurant
    (Google Maps)

COVID-19 கிருமிப் பரவலால் 50% வரை வியாபாரத்தை இழந்திருப்பதாகக் கூறும் லிட்டில் இந்தியா உணவகங்கள்

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று அச்சம் காரணமாக வியாபாரம் கணிசமாய்ப் பாதிக்கப்பட்டுள்ளதாக லிட்டில் இந்தியா உணவங்கள் சில கூறியுள்ளன.

வியாபாரம் குறைந்ததால், வாடிக்கையாளர்களை ஈர்க்க உணவகங்கள் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளன. 

அது குறித்து 'செய்தி' சில இந்திய உணவகங்களிடம் கேட்டறிந்தது.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு வரை குறைந்துள்ளது. அன்றாடம் கடைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் 30 விழுக்காட்டினர் சுற்றுப்பயணிகள். கொரோனா கிருமித்தொற்று அச்சம் காரணமாக அவர்களின் வருகையும் கணிசமாகக் குறைந்துள்ளது. 

வாடிக்கையாளர்களை ஈர்க்க பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். 30 வெள்ளிக்கு மேல் உணவு வாங்கினால், இலவச விநியோகம் போன்ற சலுகைகளை அறிவித்திருக்கிறோம். இலவச அன்பளிப்பையும் வழங்குகிறோம். இதனால் விநியோகச் சேவைகள் சற்று அதிகரித்துள்ளன. இதற்கு முன்னர் 5 வெள்ளி முதல் 10 வெள்ளி வரை உணவு விநியோகத்திற்கு வசூலிக்கப்படும். உணவகத்தில் நடைபெறவிருந்த பல நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அதனால் லாபம் 50 விழுக்காட்டிற்கும் மேல் சரியக்கூடும். 

- மாதவன், Sakunthala's உணவகத்தின் நிர்வாக இயக்குநர்


அத்தியாவசியம் இல்லாவிட்டால், குடும்பங்கள் வெளியே வரத் தயங்குகின்றன என்று அருணாச்சல பவன் உணவகம் சொன்னது. 

வியாபாரம் 40 முதல் 50 விழுக்காடு வரை குறைந்துள்ளது. கடந்த வாரத்தோடு ஒப்பிடும்போது இந்த வாரம் வியாபாரம் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு விநியோகச் சேவைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. COVID-19 கிருமித்தொற்று அச்சம் காரணமாகக் குடும்பங்கள் வெளியே வரத் தயங்குகின்றன.

சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்திருக்கிறோம். ஊழியர்கள் அடிக்கடி கைகளைக் கழுவ நினைவூட்டப்படுகின்றனர். அன்றாடம் அவர்களுக்கு உடல் வெப்பநிலைப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நாங்கள் சீனாவின் எந்தப் பொருளையும் பயன்படுத்துவதில்லை.

- செந்தில், அருணாச்சல பவன் உணவகத்தின் நிர்வாக இயக்குநர்

கொரோனா கிருமித்தொற்றின் அச்சத்தைப் போக்க சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ளதாகச் சொன்னது, காயத்திரி உணவகம். 

வழக்கமாகக் கழிவறைகள் அன்றாடம் மூன்று முறை சுத்தம் செய்யப்படும். ஆனால் தற்போது 6 முறை அவற்றைச் சுத்தம் செய்கிறோம். கைகளைக் கழுவ ஊழியர்கள் அடிக்கடி நினைவூட்டப்படுகின்றனர். சமையற்காரர் அன்றாடம் உடல் வெப்பநிலைப் பரிசோதனையை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்த முயற்சிகளை எடுத்த போதிலும் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 விழுக்காடு வரை சரிந்துள்ளதாக உணவகம் சொன்னது. 

எங்கள் வாடிக்கையாளர்களில் சுற்றுப்பயணிகள் சுமார் 40 விழுக்காட்டினர். அவர்களின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளதால் வியாபாரம் அடிபட்டுள்ளது. உணவகத்தில் நடைபெறவிருந்த ஓரிரு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவிலிருந்து வரும் பொருள்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளன.

மகேந்திரன், காயத்திரி உணவகத்தின் நிர்வாக இயக்குநர்.

அடிக்கடி வரும் வாடிக்கையாளர்களும் உணவகத்தை நாடி தற்போது வருவதில்லை எனக் கூறினார் காந்தி உணவகத்தின் உரிமையாளர் திரு. ராஜ் மோகன்.


மதிய உணவு நேரத்தில் அடிக்கடி வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அதுவே எங்களுக்கு உச்ச நேரம். தேக்கா வட்டாரத்தில் பணிபுரிபவர்கள் மட்டுமே தற்போது மதிய உணவிற்கு அதிகம் வருகின்றனர். வியாபாரம் 30 விழுக்காடு வரை பாதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வருகை குறைந்துள்ளதால் உணவும் அதிக அளவில் மிச்சமாகிறது. குப்பைத் தொட்டிகளில் அவை வீசப்படுகின்றன. உணவுகளை வீணாக்காமல் இருக்க அன்றாடம் தயாரிக்கப்படும் உணவைக் குறைத்திருக்கிறோம். இரவு நேரம் உணவகம் திறக்கப்படும் முன்னர் கிருமிநாசினியைக் கொண்டு சுத்தம் செய்கிறோம். மலேசியாவிலிருந்துதான் பெரும்பாலான காய்கறிகளைப் பெறுகிறோம். 

நிலைமை சீராகும்வரை இதே நிலையை எதிர்நோக்கவேண்டியிருக்கும்; அதனால் பல்வேறு உத்திகளை வகுத்துவருவதாகக் கூறின, லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள இந்திய உணவகங்கள்.


  

Top