Images
  • Senkang
    படம்:  Google Street View 

செங்காங் - 5 சாலைகளில் வேகக் கட்டுப்பாட்டை மீறிய 6,500 ஓட்டுநர்கள்

செங்காங்கில் உள்ள ஐந்து சாலைகளில் வேகக் கட்டுப்பாட்டை மீறியதற்காக 6,500 ஓட்டுநர்கள் கடந்த ஈராண்டில் பிடிபட்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் இடையே ஃபெர்ன்வேல் ஸ்ட்ரீட் (Fernvale Street), ஃபெர்ன்வேல் லிங்க் (Fernvale Link), ஜாலான் காயு (Jalan Kayu), ஃபெர்ன்வேல் ரோடு (Fernvale Road), செங்காங் வெஸ்ட் வே (Sengkang West Way) ஆகிய சாலைகளில் அவர்கள் பிடிபட்டதாக உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.

நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த எழுத்துபூர்வ பதிலில் அவர் அந்தத் தகவல்களை வழங்கினார்.

அந்தச் சாலைகள் அமைந்திருக்கும் தொகுதியை கவனித்துக்கொள்ளும் அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கான் தியாம் போ (Gan Thiam Poh) , கடந்த 18 மாதங்களில் அந்தச் சாலைகளில் வேகக் கட்டுப்பாட்டை மீறிய ஓட்டுநர்களின் எண்ணிக்கை பற்றிக் கேட்டிருந்தார்.

வேகக் கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை அந்தப் பகுதிகள் சிவப்புப் பகுதிகளாகக் கருதப்பட வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

சாலைகளை அவ்வாறு அடையாளப்படுத்தும் முறையைப் போக்குவரத்துக் காவல்துறை கொண்டிருக்கவில்லை.

எனினும் அந்த ஐந்து சாலைகளில் செங்காங் வெஸ்ட் வேயில் தான் வேகக் கட்டுப்பாட்டை மீறுவோரின் எண்ணிக்கை ஆக அதிகம் என்று திரு. சண்முகம் சொன்னார்.

வாகனமோட்டிகள் வேகக் கட்டுப்பாட்டை மீறுவதைத் தடுக்க அங்கு வேகக் கட்டுப்பாட்டுக் கேமராவைப் பொருத்தும் சாத்தியம் குறித்துப் போக்குவரத்துக் காவல்துறை ஆராய்ந்து வருவதாகத் திரு. சண்முகம் கூறினார்.

அதோடு வாகன இயந்திரங்களைச் சட்டவிரோதமாக மாற்றியமைத்து அதிகமான சத்தத்தை உண்டாக்கும் ஓட்டுநர்களைப் பிடிக்கும்படியும் திரு. கான் கேட்டுக்கொண்டார்.

வேகக் கட்டுப்பாட்டை மீறுவோர், சட்டத்துக்குப் புறம்பான வகையில் வாகனங்களில் மாற்றங்களைச் செய்வோர் போன்றவர்களைப் பிடிக்க போக்குவரத்துக் காவல்துறையும் நிலப் போக்குவரத்து ஆணையமும் சோதனை நடவடிக்கைகளை இணைந்து நடத்திவருவதாகத் திரு. சண்முகம் கூறினார்.
குடியிருப்பாளர்களிடமிருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில் கேள்வியைக் கேட்டதாகத் திரு. கான், CNAவிடம் சொன்னார்.

குறிப்பிடப்பட்ட சாலைகள் அருகே வசிப்போர் வாகனங்களின் இரைச்சலால் தங்களின் தூக்கம் பாதிக்கப்படுவதாக CNAவிடம் கூறினர்.

நள்ளிரவு கேட்கத் தொடங்கும் சத்தம் சில வேளைகளில் அதிகாலைவரை நீடிக்கும் என்று ஆறாண்டாக அங்கு வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் சொன்னார்.

இருப்பினும் அண்மையில் அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியதால் நிலைமை சற்று மேம்பட்டிருப்பதாகச் சிலர் கூறினர்.

வேகக் கட்டுப்பாட்டை மீறுவோருக்கு ஆயிரம் வெள்ளிவரை அபராதமும் மூன்று மாதம் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

வாகனத்தைச் சட்டத்துக்குப் புறம்பான முறையில் மாற்றியமைத்தால் ஐயாயிரம் வெள்ளிவரையிலான அபராதமும் மூன்று மாதம்வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

Top