Images
  • money'

ஜூரோங் கேட்வே ரோடு வட்டாரத்தில் 48,000 வெள்ளி கொள்ளை - ஆயுதம் ஏந்திக் கொள்ளையடித்த சந்தேகத்தில் நால்வர் கைது

ஜூரோங் கேட்வே ரோடு வட்டாரத்தில் ஆயுதமேந்தி 48,000 வெள்ளி கொள்ளையடித்ததன் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அது பற்றி நேற்று மாலை 4.15 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

19 லிருந்து 22 வயதுக்கும் இடைப்பட்ட ஆடவர்கள் மூவருக்குக் கொள்ளையில் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

குறிப்பாக எந்த இடத்தில் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

ஆடவர்களில் ஒருவர், தங்களிடம் பணம் கொடுக்கும்படிப் பெண் ஊழியரைக் கத்தி முனையில் மிரட்டியதாக நம்பப்படுகிறது.

பெண்ணை ஓர் அறைக்கு இழுத்து சென்ற அவர்கள் பின்னர், அவரைக் கட்டிப்போட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஆடவர்கள் ரொக்கத்துடன் சம்பவ இடத்திலிருந்து தப்பினர்.

அதனை தொடர்ந்து, அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கினர்.

12 மணி நேரத்திற்குள் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் செய்யப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தியை அப்புறப்படுத்திய சந்தேகத்தில் மேலும் ஓர் ஆடவரும் கைது செய்யப்பட்டார்.

கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தில் சுமார் 30,000 வெள்ளி இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

எஞ்சிய பணத்தை மீட்கும் பணி தொடர்கிறது.

சந்தேக நபர்கள் நால்வர் மீதும் நாளை குற்றஞ்சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டு சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படும். 

Top