Images
  • Robinson
    படம்: Robinson

ராபின்சன்ஸ் மூடல்: சிங்கப்பூரில் 175, மலேசியாவில் 125 ஊழியர்களுக்கு பாதிப்பு

சிங்கப்பூரில் உள்ள கடைசி இரண்டு ராபின்சன் பேரங்காடிகளும் மூடப்படுவதால், ஊழியர்கள் 175 பேர் பாதிக்கப்படுவர் என்று தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் The Heeren, Raffles City ஆகிய கடைத்தொகுதிகளில் உள்ள நிறுவனத்தின் கடைசி இரண்டு ராபின்சன் பேரங்காடிகள் மூடப்படவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.

கடை உரிமையாளர்களுடன் நடத்தப்படும் கலந்துரையாடலைப் பொறுத்து, கடைகள் இன்னும் எவ்வளவு நாள்களுக்கு செயல்படும் என்பது தெரியவரும் என நிறுவனம் CNA-யிடம் கூறியது.

அதன் அடிப்படையில், ஊழியர்களின் இறுதி நாள் வேறுபடும்.

கடைகள் மூடப்படுவதால், சட்டப்படி, ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய ஆதரவுத் தொகை வழங்கப்படும் என்று நிறுவனம் உறுதியளித்தது.

ராபின்சன் பேரங்காடி, மலேசியாவில் உள்ள இரண்டு கிளைகளையும் மூடுகிறது.

Shoppes at Four Seasons Place, The Gardens Mall ஆகிய இடங்களில் அதன் கிளைகள் உள்ளன. ஊழியர்கள் 125 பேர் பாதிக்கப்படுவர்.

தற்போதைக்கு, பாதிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர், மலேசிய கடைகளின் நிர்வாகப் பணிகளில் உள்ள அனைத்து ஊழியர்களும் தொடர்ந்து நிறுவனத்தின் கீழ் பணிபுரிவர் என்று நிறுவனம் விளக்கியது.

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும், Al-Futtaim குழுமத்தின் கீழ், ராபின்சன்ஸ் நிறுவனத்துடன், Marks & Spencer, Zara ஆகிய நிறுவனங்களும் செயல்படுகின்றன.

குழுமத்திலுள்ள மற்ற நிறுவனங்களில் ஊழியர்களை, வேலைக்கு அமர்த்தும் முயற்சியில் உள்ளதாக ராபின்சன்ஸ் சொன்னது. 

Top