Images
  • saf
    (படம்: MINDEF)

சிங்கப்பூர் ஆயுதப் படை, வெளிநாட்டு ராணுவப் பயிற்சிகளைப் படிப்படியாக மீண்டும் தொடங்கும்

சிங்கப்பூர் ஆயுதப் படை, படிப்படியாக அதன் வெளிநாட்டு ராணுவப் பயிற்சிகளைத் தொடங்கும் எனத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பயிற்சிகளை, ஈராண்டுக்கு மேலாக நிறுத்திவைப்பது, ஆயுதப் படையின் ஆற்றலைப் பாதிக்கக்கூடும் என்றார் அவர்.

அமெரிக்காவின் ஹவாயி மாநிலத்தில் 11 நாடுகளுடன் இணைந்து, சிங்கப்பூர்க் கடற்படை பயிற்சியில் ஈடுபடவுள்ளது.

ஆகாயப் படையும், குறுகிய கால அடிப்படையில், ஆஸ்திரேலியாவுடன் விமானப் பயிற்சிகளை தொடங்கத் திட்டமிடுவதாகக் கூறப்பட்டது.

COVID-19 நோய்ப்பரவல் காரணமாக சிங்கப்பூர் ஆயுதப் படை, அனைத்து வெளிநாட்டு ராணுவப் பயிற்சிகளையும், கடந்த மே மாதம் தற்காலிகமாக நிறுத்தியது.

வெளிநாடுகளிலிருந்து வந்து ராணுவ வீரர்கள் பயிற்சி பெறுவதை அனுமதிக்க, சில நாடுகள் தயங்கியதாகச் சொன்னார் டாக்டர் இங்.

பயிற்சி நிறுத்தப்பட்ட காலத்தில், இங்கேயே பாவனைப் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

ஆனால், அவை ஒருபோதும் உண்மையான பயிற்சிகளுக்கு ஈடாக மாட்டா என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

கடந்த மாதத்திலிருந்து ஒரு சில பயிற்சிகள் நடந்து வந்துள்ள வேளையில், மேலும் சில பயிற்சிகள், குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும்.

வீரர்கள் மற்ற நாடுகளில் தரையிறங்காத வகையிலும் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பில்லாத வகையிலும் பயிற்சிகள் அமைந்திருக்கும்.  

Top