Images
  • SBS
    படம்: SBS Transit Facebook

SBS Transit பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய முகக்கவசம் அணியாத பயணி

SBS Transit பேருந்து ஓட்டுநரை முகக்கவசம் அணியாத பயணி ஒருவர் தாக்கியுள்ளார்.

அந்தச் சம்பவம் பேருந்துச் சேவை எண் 21-இல் நேற்று நடந்ததாகப் பேருந்து நிறுவனம் தெரிவித்தது.

நேற்றுப் பிற்பகல் 2:45 மணியளவில் பாசிர் ரிஸ் டிரைவ்
6-இல் ஓட்டுநர் தாக்கப்பட்டதாக Facebook பதிவில் அது குறிப்பிட்டது.

பயணி பேருந்தில் நுழைந்தபோது முகக்கவசம் அணியவில்லை; அதன் பிறகு பயணத்தின்போது முகக்கவசத்தை அவர் அணிந்துள்ளார்.

பேருந்து ஓட்டுநரைச் சிறிதுநேரம் தகாத வார்த்தைகளால் பயணி திட்டியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஓட்டுநர் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துவிட்டுப் பேருந்தைச் சாலையோரமாக நிறுத்தியுள்ளார்.

அப்போது ஆடவர் ஓட்டுநரின் சட்டையைப் பிடித்து தலையில் தாக்கத் தொடங்கினர்.

அதைத்தொடர்ந்து பேருந்து நிறுத்தத்தில் இருந்த சிலர் ஆடவரைப் பேருந்திலிருந்து வெளியேற்றினர்.

அதன்பிறகு ஆடவர் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

39 வயதுப் பேருந்து ஓட்டுநர், சம்பவத்திற்குப் பிறகு சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஓட்டுநருக்கு ஆபத்தான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. அவருக்கு 3 நாள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆடவருக்கு 52 வயது என்றும் அவரிடம் காயங்கள் ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருந்தன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணை தொடர்கிறது.
 

Top