Images
  • Polce
    (படம்: AFP/Roslan Rahman)

போலி புகாரின் தொடர்பில் மூவர்மீது சிங்கப்பூர்க் காவல்துறை விசாரணை

கடந்த இரண்டு வாரத்தில் போலிப் புகார்களைக் கொடுத்ததாக மூன்று பேர்மீது விசாரணை நடத்தப்படுகிறது.

கடந்த மாதம் 28ஆம் தேதி, 46 வயது ஆடவர், மார்ஸ்லிங் லேனில் திருட்டுச் சம்பவம் நடந்ததாகக் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.

அடையாளம் தெரியாத நபர் கூர்மையான பொருளை வைத்துத் தம்மை மிரட்டியதாகவும், தம்மிடம் இருந்த 700 வெள்ளியைக் களவாடிச் சென்றதாகவும் அவர் காவல்துறையிடம் கூறியிருக்கிறார்.

என்றாலும், அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதாகக் காவல்துறையினர் கூறினர்.

முதற்கட்ட விசாரணையில் பணத்தை அவர் எங்கோ வைத்துவிட்டு, மனைவியிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் காவல்துறையிடம் புகார் அளித்ததாகத் தெரியவந்துள்ளது.

இன்னொரு சம்பவத்தில், 27 வயது ஆடவர் கடந்த சனிக்கிழமை உட்லண்ட்ஸ் ரிங் ரோட்டில் மோட்டார்சைக்கிள் திருடப்பட்டதாகப் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் நடந்ததோ வேறு. அவரின் நண்பருக்கு ஆடவர் மோட்டார் சைக்கிலை இரவல் கொடுத்திருக்கிறார். நண்பர் அதைக் கொண்டு தவறிழைத்திருக்கலாம் என்ற பயத்தில் மோட்டார்சைக்கிளைக் காணவில்லை என்று புகார் கொடுத்திருக்கிறார் ஆடவர்.

மூன்றாவது சம்பவத்தில், 25 வயது ஆடவர் வாம்போ டிரைவ் பலமாடிக் கார் நிறுத்தும் இடத்திலிருந்து மோட்டார்சைக்கிளைக் காணவில்லை என்று காவல்துறையிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

ஆனால் அவர் அதனை இணையம்வழி வேறொருவருக்கு விற்றதாகவும் உரிமையாளர் விவரங்களை இன்னமும் மாற்றவில்லை என்றும் தெரியவந்தது. மோட்டார்சைக்கிளைப் பயன்படுத்தி அதனை வாங்கியவர் சில போக்குவரத்து குற்றங்களைப் புரிந்ததாகவும் தகவல் அளிக்கப்பட்டது.

போலிப் புகார்களுக்கு ஒதுக்கப்படும் வளங்களையும் நேரத்தையும் அவசரநிலைக்காகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று காவல்துறை கூறியது.

காவல்துறையிடம் போலியான புகார் அளிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் ஐந்தாயிரம் வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படலாம். 

Top