Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பேச்சு மூச்சின்றிக் கிடந்த ஊழியரைக் காப்பாற்றிய மூவருக்கு SCDF விருது

இயூ டீ பாய்ண்ட் (Yew Tee Point) கடைத்தொகுதியில் கடந்த மாதம் 12ஆம் தேதி, பேச்சு மூச்சு அற்ற நிலையில் இருந்த பராமரிப்பு ஊழியர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய மூன்று ஊழியர்களுக்கு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

வாசிப்புநேரம் -
பேச்சு மூச்சின்றிக் கிடந்த ஊழியரைக் காப்பாற்றிய மூவருக்கு SCDF விருது

படம்: சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை

இயூ டீ பாய்ண்ட் (Yew Tee Point) கடைத்தொகுதியில் கடந்த மாதம் 12ஆம் தேதி, பேச்சு மூச்சு அற்ற நிலையில் இருந்த பராமரிப்பு ஊழியர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய மூன்று ஊழியர்களுக்கு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவர்கள் மூவருக்கும், 'உடனடி உதவி வழங்குபவருக்கான சமூக விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அவர்கள் CPR எனப்படும் உயிர்க்காப்புச் சிகிச்சை முறையையும், AED எனப்படும் தானியக்க உயிர்க்காப்புச் சாதனத்தையும் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவருக்கு உதவினர்.

திரு. பாலகிருஷ்ணன், திரு. ராம் குமார், திருவாட்டி நூர் ஆயிஷா( Nur Aishah) ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டு சமூக வீரர்களாகச் சிறப்பிக்கப்பட்டனர்.

46 வயது திரு. பாலகிருஷ்ணனும் 37 வயது திரு. ராம் குமாரும் இயூ டீ பாய்ண்ட் கடைத்தொகுதியில் பாதுகாவல் அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர். இருவரும் மலேசியர்கள்.

FlyScoot நிறுவனத்தில் இருந்து அந்தக் கடைத்தொகுதியில் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாகத் தற்காலிகப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள 30 வயது நூர் ஆயிஷாவும் அந்த மூவரில் ஒருவர் .

69 வயது பராமரிப்புப் பணியாளர் ஒருவர் கழிப்பறையில் மயங்கிய நிலையில் இருந்தார். அதனைப் பற்றி திரு. ராம் குமார் தமது சக ஊழியர்களான திரு.பாலகிருஷ்ணனுக்கும் திருவாட்டி நூர் ஆயிஷாவுக்கும் தெரிவித்தார்.

அந்தச் சம்பவத்தைக் குறித்த மேல் விவரங்களை அறிந்துகொள்ள 'செய்தி' திரு. பாலகிருஷ்ணனையும் திரு. ராம் குமாரையும் சந்தித்தது.

(படம்:  Frasers Property)

சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும் என் நினைவிற்கு அவசர மருத்துவ உதவி வாகனமும் தானியக்க உயிர்க்காப்புச் சாதனமும் தான் முதலில் நினைவிற்கு வந்தன.

ஓடிப்போய்ப் பார்த்தபோது, மயங்கிய நபருக்கு மூச்சு இல்லை. நாடித் துடிப்பு இல்லை. உடனடியாக எனது நண்பரை தானியக்க உயிர்க்காப்புச் சாதனத்தை எடுத்து வரக் கூறினேன். அந்த நேரத்தில் நானும் ஆயிஷாவும் மயங்கிக் கிடந்த நபருக்கு உயிர்க்காப்புச் சிகிச்சை முறையைச் செய்து வந்தோம். AED சாதனம் வந்ததும், மயங்கிய பணியாளரின் உடலில் இருந்த ஈரத்தைத் துடைத்தேன்.

பிறகு ஒருமுறை மின்சார அதிர்வு செலுத்தினோம். மூச்சு சீராக வரவில்லை. தொடர்ந்து உயிர்க்காப்புச் சிகிச்சை முறையை மேற்கொண்டு வந்தோம்.

அதற்குள் சம்பவ இடத்திற்கு மருத்துவ உதவியாளர்கள் வந்தடைந்தனர் 

என்று திரு.பாலகிருஷ்ணன் நினைவுகூர்ந்தார்.

உயிர்க்காப்புத் திறன்களைக் கற்றுக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அந்தச் சம்பவம் அமைந்திருந்ததாகத் திரு. ராம் குமார் சொன்னார்.

(படம்:  Frasers Property)

முதல்முறையாக நான் கற்றுக்கொண்ட CPR முறையையும் AED சாதனத்தையும் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்தது.

ஒவ்வொரு முறையும் அந்தப் பயிற்சிகளுக்குச் செல்லும்போது ஏன் இவற்றை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி பலமுறை என்னுள் ஏற்பட்டதுண்டு.

ஆனால் அவசரமாகத் தேவைப்படும்போது தான் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன்.

பயிற்சியின்போது கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்தி உயிரைக் காப்பாற்றியுள்ளேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. 

என்றார் திரு. ராம் குமார்.

பாதுகாவல் துறையில் இருப்போர் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற பயிற்சிகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் எப்போதும் தயார்நிலையில் இருப்பது மிகவும் முக்கியம் என்றும் திரு. ராம் குமார் வலியுறுத்துகிறார்.

அவர்கள் காப்பாற்றிய பராமரிப்புப் பணியாளர் உடல்நிலை தேறி தற்போது மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பியுள்ளார்.

உயிர்க்காப்புத் திறன்கள் எப்போது கைகொடுக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

அதனை முறையாகக் கற்றுக்கொண்டு தயார்நிலையில் இருந்தால், உயிர்களைக் காப்பாற்றலாம் என்று இருவரும் 'செய்தி'இடம் கூறினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்