Images
  • SCDf

தேசியச் சேவையாளர் துன்புறுத்தல் சம்பவம்: குடிமைத் தற்காப்புப் படைத் தளபதியிடம் விசாரணை

முழுநேர தேசிய சேவையாளர் ஒருவர், துன்புறுத்தல் சம்பவத்துக்குப் பிறகு கிணற்றில் மூழ்கி மாண்டதன் தொடர்பில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் தளபதி ஒருவர் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

கடந்த ஆண்டு மே மாதம் 13-ஆம் தேதி துவாஸ் வீயூ (Tuas View) தீயணைப்பு நிலையத்தில் 12 மீட்டர் ஆழமுள்ள கிணற்றில் தள்ளிவிடப்பட்ட கார்ப்பரல் கொக், கிணற்றில் மூழ்கி மரணமடைந்தார்.

முதலாம் வாரண்ட் அதிகாரி முகமது ஃபாரித் (Mohamed Farid), முகமது சலே ( Mohd Saleh) மீது, கண்மூடித்தனமான செயலுக்கு உடந்தையாக இருந்து மரணம் விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவருடன் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் தளபதியான 38வயது லெஃப்டினன்ட் கென்னத் சோங், தமது அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கார்ப்பரல் கொக் கிணற்றுக்குள் தாமாகவே குதிப்பார் எனத் தாம் எதிர்பார்த்ததையும் ஒரு மேலதிகாரியாக தமது கடமையிலிருந்து தவறியதையும் லெஃப்டினன்ட் சோங் ஒப்புக்கொண்டார்.

அவரது தற்காப்பு வழக்குரைஞர் கார்ப்பரல் கொக்கைக் கிணற்றில் தள்ள எந்த எண்ணமும் இல்லையென்றும் ஸ்டாஃப் சார்ஜண்ட் முகமது நூர் ஃபாட்வா அவரைத் தள்ளியது எதிர்பாராத ஒன்று எனவும் அவர் அதற்கு முன்னர் கூறியிருந்தார்.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் அதிகாரிகள் கார்ப்பரல் கொக்கிற்கு எந்தவொரு கெடுதலையும் விளைவிக்கமாட்டார்கள் என்று லெஃப்டினன்ட் சோங் நம்பியதாக வழக்குரைஞர் கூறினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக நான்காண்டுச் சிறையோ, 10ஆயிரம் வெள்ளி அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

கார்ப்பரல் கொக் மரணத்தின் தொடர்பில் மொத்தம் 5 சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நாளை தொடரும் விசாரணை இம்மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Top