Images
  • FIRE
    (படம்: Facebook/Murali Pillai)

தீயணைப்புப் பணிகளின்போது தண்ணீர் இல்லாத குழாய்கள் - நகர மன்றத்துக்கு எச்சரிக்கை

ஜூரோங் - கிளமென்டி நகர மன்றத்துக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தண்ணீர் விநியோகம் இல்லாத குழாய்களை வைத்திருந்ததால், தீயணைப்புப் பணிகளின்போது குடிமைத் தற்காப்புப் படை சிரமத்தை எதிர்நோக்கியது. அதைத் தொடர்ந்து, அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் புக்கிட் பாத்தோக் பகுதியில் உள்ள புளோக்கில் தீ மூண்டபோது அங்குள்ள தீயணைப்புத் தண்ணீர்க் குழாய்கள் பூட்டப்பட்டதைத் தீயணைப்பாளர்கள் அறிந்தனர். பூட்டை உடைத்து குழாய்களைப் பயன்படுத்தியபோது அவற்றில் தண்ணீர் விநியோகம் இல்லாததை அறிந்தனர்.


இறுதியில், தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீரைக் கொண்டு தீ அணைக்கப்பட்டது.

குடியிருப்புப் பேட்டைகளின் தீப்பாதுகாப்பு வசதிகளைப் பராமரிப்பதுடன் அவை ஒழுங்காகச் செயல்படுவதை உறுதிசெய்வதும் நகர மன்றங்களின் பொறுப்பு என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தீ விபத்தின்போது, சமையலறைச் சன்னல் வழியாக இருவர் மீட்கப்பட்டனர்.

சுமார் அரை மணி நேரம் தீ எரிந்ததாகச் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறினர்.

குடிமைத் தற்காப்புப் படை நடத்திய சோதனையில், தற்போது தண்ணீர்க் குழாய்கள் சீராக வேலை செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

Top