Images
  • primary 1
    (படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

COVID-19 கிருமித்தொற்று: பள்ளிகளை மூடும் எண்ணம் இப்போதைக்கு இல்லை - கல்வி அமைச்சர் ஓங்

சிங்கப்பூரில் COVID-19 கிருமிப் பரவல் தொடர்பில் பள்ளிகளை மூடும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று கல்வி அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.

பள்ளிகளை மூடவேண்டும் என்று பெற்றோர் கேட்டுக்கொண்டதற்கு அவர் பதிலளித்துப் பேசினார்.

பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருப்பது பாதுகாப்பான உணர்வைத் தரும் என்று பெற்றோர் பலர் கூறியதை அவர் சுட்டினார்.

ஆனால் அதிலும் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் கூறினார்.

உதாரணத்துக்கு, வீட்டிலும் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

பள்ளிகள் மூடப்பட்டாலும், பெரிய வகுப்பு மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்து பழகுவர்; அப்போதும் கிருமித்தொற்று ஏற்படலாம் என்று திரு. ஓங் குறிப்பிட்டார்.

பள்ளிகளில், அடிக்கடி கை கழுவும்படியும், முகத்தைத் தொடவேண்டாம் என்றும் மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவுறுத்தப்படுகிறது.

உடல்நலமில்லாவிட்டால் பள்ளிக்கு வரவேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பள்ளிகளை மூடினால், பிள்ளைப் பராமரிப்புக்கு மாற்று ஏற்பாடுகள் இல்லாத பெற்றோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவர் என்பதை அமைச்சர் சுட்டினார்.

சுகாதாரத் தரநிலையை உயர்த்துவதன் மூலம் சிங்கப்பூரில் மாணவர்களுக்குப் பாதுகாப்பான இடங்களாகப் பள்ளிகளும் விளங்குவதை உறுதிசெய்யலாம் என்று கல்வி அமைச்சர் கூறினார். 

Top