Images
  • sea

கடல்நீர் மட்டத்திலிருந்து 4 மீட்டர் உயரத்தில் கட்டப்படவுள்ள கட்டடங்கள் - என்ன நன்மை?

சிங்கப்பூரில் தற்போது கடல்நீர் மட்டத்திலிருந்து 3 மீட்டர் உயரத்தில் கட்டடங்கள் எழுப்பப்படுகின்றன. இனி அது 4 மீட்டருக்கு உயர்த்தப்படும் என்று பிரதமர் லீ சியென் லூங் தமது தேசிய தினக் கூட்ட உரையில் தெரிவித்திருந்தார். சாங்கி விமான நிலையத்தின் 5ஆவது முனையம், துவாஸ் துறைமுகம் ஆகியவை கடல்நீர் மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரத்தில் கட்டப்படவுள்ளன.

அதுகுறித்துப் பொறியாளர்கள் செய்தியுடன் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.


தற்போது உள்ள 3 மீட்டர் அளவு பாதுகாப்பானது தான். 4 மீட்டருக்கு அது உயர்த்தப்படும்போது, கட்டடங்கள் வெள்ளத்திலிருந்து மேலும் பாதுகாப்பைப் பெறுகின்றன. வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது.

தாழ்வான பகுதியில் அமைந்துள்ள கட்டடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் சாத்தியம் அதிகம். சாங்கி விமான நிலையத்தின் 5ஆவது முனையம், துவாஸ் துறைமுகம் ஆகியவை பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய இடங்களாகத் திகழ்வதால் அவற்றுக்குக் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

என்றார் பொறியாளரும் பாதுகாப்பு மேலாளருமான சரவணகுமார்.


இன்னும் 100 ஆண்டுகளுக்கு 4 மீட்டர் உயரம் போதுமானதாக இருக்கும். அதற்கு அப்பால், உலக வெப்பமயமாதல் பொறுத்தே புதிய உயரம் நிர்ணயிக்கப்படமுடியும். சுனாமி அலை போன்ற எதிர்பாரா நிகழ்வுகள் ஏற்படும்போது, 4 மீட்டர் உயரம், அதன் பாதிப்புகளைக் குறைக்க உதவும்

என்று நிபுணத்துவப் பொறியாளரான டாக்டர். கிருஷ்ணன் முருகப்பன் தெரிவித்தார்.  

Top