Images
  • my sg dispute
    (படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூர், மலேசியா நீர்ப்பகுதிப் பூசல் - காலவரிசை

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் அண்மையில் நீர்ப்பகுதி தொடர்பான பூசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களில் துவாஸுக்கு அருகே 14 முறை ஊடுருவல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகச் சிங்கப்பூர்ப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் அதற்கு 3 முறை ஆட்சேபம் தெரிவித்திருந்தது.

இந்தப் பூசல் தொடர்பான காலவரிசை இதோ:

1979: மலேசியா தனக்குச் சொந்தமெனக் கருதும் நீர்ப்பகுதியின் வரைபடத்தை வெளியிடுகிறது. பெட்ரா பிராங்காமீதான உரிமைக் கோரிக்கையும் அதில் அடங்கும். சிங்கப்பூருடன் கலந்தாலோசிக்காமல் அந்த வரைபடம் உருவாக்கப்பட்டது. 

1980: 1979 வரைபடத்திற்கு எதிராக சிங்கப்பூர் அரசதந்திர ரீதியான கண்டனத்தைத் தெரிவிக்கிறது. வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட எல்லைப் பகுதிகள் சிங்கப்பூரின் அரசுரிமையை மீறுவதாகச் சிங்கப்பூர் தெரிவித்தது. பெட்ரா பிராங்கா சிங்கப்பூருக்குச் சொந்தம் என்று சிங்கப்பூர் தெரிவித்தது. 

1987: மலேசியா தனது ஜொகூர் பாரு துறைமுக எல்லைகளை வெளியிட்டது. 1979 வரைபடத்தில் உரிமை கோரப்பட்ட நீர்ப்பகுதி எல்லைகளும் அதில் இடம்பெற்றிருந்தன. 

1995: சிங்கப்பூரும் மலேசியாவும் 1995 தீர்மானத்தை எட்டின. நீரிணைப் பகுதி, ஜொகூர் நீர்ப்பகுதி உடன்பாடு 1927 ஆகியவற்றுக்கு இணங்க நீர்ப்பகுதி எல்லைகள் துல்லியமாக வரையறுக்கப்பட்டன.

1997: ராஃபிள்ஸ் கலங்கரை விளக்கத்திற்கு மேற்கே துறைமுக எல்லைப் பகுதியைச் சிங்கப்பூர் சற்று விரிவுபடுத்தியது. கப்பல் போக்குவரத்தை இன்னும் எளிதாகக் கண்காணிக்க அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அப்போதுதான் சிங்கப்பூர் அதன் துறைமுக எல்லையில் கடைசியாக மாற்றம் செய்தது.

1999: மலேசியா மாற்றப்பட்ட ஜொகூர் பாரு துறைமுக எல்லைகளை வெளியிட்டது. 1979 வரைபடத்தில் இருந்த அம்சங்கள் அப்படியே இருந்தன. அடுத்த 20 ஆண்டுகளுக்கு அந்த எல்லைப் பகுதியை மதித்து இருநாடுகளும் நடந்து கொண்டன. 

அக்டோபர் 25, 2018: மலேசியா ஒருதலைப்பட்சமாக ஜொகூர் துறைமுக எல்லைகளில் மாற்றங்களை அறிவித்திருந்தது. மலேசிய மத்திய அரசாங்கத்தின் அரசிதழிலும் அது வெளியிடப்பட்டது.

நவம்பர் 30, 2018: சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் மலேசியாவின் எல்லை மாற்றங்களை மதிக்க வேண்டாம் என்ற சுற்றறிக்கையை கப்பல்களுக்கு வெளியிட்டடது.

Top