Images
  • people

போதைப்பொருள் சட்டங்களைப் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் ஆதரித்தாலும், இளையர்களின் மனப்போக்கில் மாற்றம்

போதைப் புழக்கத்திற்கு எதிரான கடுமையான சட்டங்களைப் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் ஆதரித்து வந்தாலும், இளையர்களில் பாதி பேர் மட்டுமே  போதைப்பொருள் கடத்தலுக்கு மரணத் தண்டனை தகுந்தது என்று கூறியுள்ளனர்.

30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 விழுக்காட்டினர், கஞ்சா புழக்கத்தை, தொடர்ந்து சட்ட விரோதமாகக் கருதவேண்டுமெனக் கூறினர்.

ஆனால் இளையர்களில் 80 விழுக்காட்டினர் மட்டுமே அவ்வாறு கருதுகின்றனர்.

கஞ்சா பயன்படுத்துவது உடல்நலத்துக்குத் தீங்கானது என்று 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 84 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.

ஆனால், இளையர்களில் 68 விழுக்காட்டினர் மட்டுமே அதைத் தீங்கு விளைவிக்கும் செயலாகக் கருதுகின்றனர்.

சிங்கப்பூரில் போதைப் பொருள் குறித்த மக்களின் கருத்துகளை அறிந்துகொள்ள சென்ற ஆண்டு ஜூலையிலிருந்து அக்டோபர் வரை உள்துறையமைச்சு ஒரு கருத்தாய்வை நடத்தியது.

ஆய்வின் அடைப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் விவரங்களை, உள்துறை அமைச்சு இன்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டது.

கருத்தாய்வில் 2,000 பேர் பங்கேற்றனர். அவர்களில் சுமார் 1400 பேர் 13லிருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

போதைப் பொருளின் தாக்கம், போதைப் பொருள் கடத்துவோரைத் தடுக்கும் முறைகள் ஆகியவை பற்றி அவர்களிடம் கேட்டறியப்பட்டது.

சிங்கப்பூரின் போதைப் பொருள் ஒழிப்புக் கொள்கைகளுக்கு பொதுமக்களிடம் வலுவான ஆதரவு உள்ளது.

சுமார் 70 விழுக்காட்டினர் போதைப் பொருளைக் கடத்தும் குற்றத்துக்கு மரண தண்டனை சரியானதே எனக் கருதுகின்றனர்.

இருப்பினும், ஒட்டுமொத்த மக்கள் தொகையோடு ஒப்புநோக்க மரண தண்டனைக்கான இளையர்களின் ஆதரவு சற்றுக் குறைவாக உள்ளது. 

Top