Images
  • shan

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறுவோர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்: அமைச்சர் சண்முகம்

COVID-19 கொள்ளைநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டிருக்கும் 'வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை' மீறுவோர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் கூறியிருக்கிறார்.

இந்த மாதம் 22ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டவர்க்கும் அந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

உத்தரவை மீறுவோர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுப்பர் என்பதை வலியுறுத்தும் வகையில் திரு சண்முகத்தின் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் இருப்போர் 14 நாள்களுக்கு எல்லா நேரமும் வீட்டிலேயே இருக்கவேண்டும். 

ஆனால் அண்மையில் வெளிநாடுகளிலிருந்து திரும்பியோர், குறிப்பாக பிரிட்டனிலிருந்து வந்தோர், உள்ளூர் உணவுகளைச் சுவைக்க வெளியில் சென்றதாக சில அறிக்கைகள் வெளிவந்தததைத் திரு சண்முகம் சுட்டினார்.

சிலர் வீட்டில் கொண்டாட்டங்கள் நடத்தியதாகவும், கேளிக்கை இடங்களில் நண்பர்களுடன் நேரம் செலவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மியன்மாரிலிருந்து திரும்பிய ஒருவர்,உள்ளூர் உணவைச் சுவைக்கச் சென்று, அதைப் படமெடுத்துத் தமது Facebook பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

அது குறித்து விசாரிக்கச் சொல்லியிருப்பதாய்த் திரு சண்முகம் குறிப்பிட்டார்.

இத்தகைய நடவடிக்கை தென்பட்டால், பொதுமக்கள் அது குறித்துக் காவல்துறையினரிடம் தெரிவிக்கலாம்.  

Top