Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இனவாதம் இருக்கிறது; ஆனால் நிலைமை முன்னைக் காட்டிலும் இப்போது மேம்பட்டிருக்கிறது: அமைச்சர் சண்முகம்

சிங்கப்பூரில் இன, சமய வேறுபாடுகள் இருக்கின்றன; ஆனால் தற்போதைய நிலைமை முன்னைக் காட்டிலும் முன்னேறி வருகிறது; நல்ல நிலைமைக்கு வந்துகொண்டிருக்கிறது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் இனவாதம் இருக்கிறது; ஆனால் நிலைமை முன்னைக் காட்டிலும் இப்போது மேம்பட்டிருக்கிறது: அமைச்சர் சண்முகம்

படம்: CNA

சிங்கப்பூரில் இன, சமய வேறுபாடுகள் இருக்கின்றன; ஆனால் தற்போதைய நிலைமை முன்னைக் காட்டிலும் முன்னேறி வருகிறது; நல்ல நிலைமைக்கு வந்துகொண்டிருக்கிறது.

என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்திருக்கிறார்.

இதுபோன்ற பல இன சமுதாயத்தில், உலகின் எல்லா சமுதாயத்திலும், இந்த மாதிரியான வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்

என்றார் திரு சண்முகம்.

சிங்கப்பூரில் இனம் குறித்து வெளிப்படையாகப் பேசுகிறோம். அது குறித்து ஆய்வு நடத்துகிறோம். கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஆய்வுகள் ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. இனம், சமயம் குறித்த மக்களின் கருத்துகள் கேட்டறியப்படுகின்றன.

இனவாதம் உள்துறை அமைச்சு, மற்ற அமைச்சுகளின் முக்கிய அக்கறைக்குரிய அம்சம். நாங்கள் ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறோம். இன, சமய வேறுபாடுகள் அத்தகைய ஒருமைப்பட்ட சமுதாயத்தை வேறுபடுத்தி, வெவ்வேறாகப் பிரிக்க விடக்கூடாது. அதனால்  இன, சமய வேறுபாடுகளைக் குறைப்பதில் அரசாங்கம் மும்முரமாக இருக்கிறது.

என்றார் அமைச்சர் சண்முகம்.

அண்மையில் YouTube தளத்தில் ப்ரீத்தி நாயர், சுபாஸ் நாயர் உடன்பிறப்புகள், சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்டனர். அதில் NETS நிறுவனத்தின் மின்னியல் கட்டண முறை விளம்பரத்தைக் கண்டிக்கும் தகாத வார்த்தைகளும், சைகைகளும் இடம்பெற்றிருந்தன.

ப்ரீத்தி நாயர், சுபாஸ் நாயர் இருவருக்கும் எல்லாரையும்போல், இனம் குறித்த தங்கள் கருத்துகளை முன்வைக்க எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால் அவர்கள் அதை வெளிப்படுத்திய விதம் தவறு. அவர்களுடைய உரிமையை யாரும் கேள்விக்குறியாக்கவில்லை. ஆனால் அதைக் கூறிய முறைதான் சரியில்லை என்று கூறுகிறோம். அவர்களைப் போன்று இன, சமயக் கருத்துகளை எல்லோரும் கூறத் தொடங்கினால், இன, சமய வேறுபாடுகள் கூடுமே தவிர, குறையாது

என்றார் திரு. சண்முகம்.

மார்சிலிங் ரைஸில் உள்ள ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் புதிய 4 மாடிப் பன்னோக்குக் கட்டடத்திற்கான நிலந்திருந்தும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் அவ்வாறு கூறினார்.

 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்