Images
  • Shipping COntainer
    (படம்: AVA)

பண்ணையின் சரக்குக் கொள்கலனில் வெளிநாட்டினரைத் தங்க வைத்த ஆடவருக்கு அபராதம்


சிங்கப்பூரில் பண்ணை உரிம நிபந்தனைகளை மீறியதற்காக 58 வயது ஆடவருக்கு 1,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் அதனைத் தெரிவித்தது.

பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்ற ஆணையம், சிங்கப்பூர் நில ஆணையத்துடனும் மனிதவள அமைச்சுடனும் இணைந்து கை ஹொங் அகுவேட்டிக்ஸ் (Kai Hong Aquatics) எனும் பண்ணையில் அதிரடிச் சோதனை நடத்தியது.

பண்ணைக்குச் சொந்தக்காரரான டோ கேய் ஹோங் (Toh Kay Hong) எனும் அந்த ஆடவர், 'skip tanks' எனும் கொள்கலன்கள் பலவற்றைத் தமது பண்ணையில் வைத்திருக்கிறார்.

அதோடு பண்ணையில் பணிபுரியாத 2 வெளிநாட்டினரை அதில் குடியிருக்க வைத்திருக்கிறார் டோ.

கொள்கலனை இருப்பிடமாக மாற்றியமைத்து அவர்களில் ஒருவர் அங்கு மூன்று நாய்களுடன் தங்கியிருக்கிறார்.

வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்தின் பண்ணை உரிம நிபந்தனைகளை மீறுவோருக்கு ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனையும் 10,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
 

Top