Images
  • ship
    படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

சிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியிலிருந்து மலேசியா அதன் கப்பல்களை அகற்றவேண்டும்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

சிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியிலிருந்து மலேசியா அதன்  கப்பல்களை அகற்றவேண்டும் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட கடற்பகுதியில் அசம்பாவிதம் ஏதேனும் நேர்ந்தால் அதற்கு மலேசியாதான் பொறுப்பு என்று அமைச்சு சுட்டியது.

கிரீஸ் நாட்டில் பதிவுசெய்யப்பட்ட பிரெயஸ் (Pireas) என்ற கப்பலும் மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான பொலாரிஸ் என்ற கப்பலும் நேற்று துவாஸுக்கு அருகே மோதிக்கொண்டன.

அந்தப் பகுதியில் மலேசியா தனது கப்பல்களைத் தொடர்ந்து நிறுத்திவைத்திருந்தால் கடல் போக்குவரத்தின் பாதுகாப்புக்கு அது மிரட்டலாக விளங்கும் என்று வெளியுறவு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது. 

கிரேக்கக் கப்பல் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் தஞ்சோங் பெலப்பாஸுக்குச் சென்றுகொண்டிருந்தபோது மோதல் சம்பவம் நேர்ந்தது.

கிரேக்கக் கப்பல் 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சரக்குக் கப்பல் எனத் தெரியவந்துள்ளது.

மலேசியாவின் பொலாரிஸ் அந்நாட்டின் கடல்துறைக்குச் சொந்தமானது.

எல்லைகளை நிர்ணயிக்கவும் அபாயங்களை அடையாளங்காணவும் அது பயன்படுத்தப்பட்டுவருகிறது.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து சிங்கப்பூரும் மலேசியாவும் கடல் எல்லை குறித்த சர்ச்சையை எதிர்நோக்குகின்றன. 

ஜொகூர் பாரு துறைமுகத்தின் எல்லையை மலேசியா விரிவுபடுத்தியது;

அது, சிங்கப்பூரின் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் செயல் என்று சிங்கப்பூர் கூறிவருகிறது.


Top