Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'மனமிருந்தால் எதுவும் தடையில்லை'-பிரான்ஸில் உள்ள முன்னிலை ஊழியர்களுக்கு உதவிய சிங்கப்பூர் இளையர்

சிங்கப்பூரர்கள் COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உள்ளூரில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முனைப்போடு ஈடுபட்டு வருகின்றனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரர்கள் COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உள்ளூரில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முனைப்போடு ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு உயர்கல்விக்காக பிரான்ஸுக்குச் சென்ற 25 வயது சிங்கப்பூர் இளையரான ரவி சிங்காரம், அங்குள்ள முன்னிலை ஊழியர்களுக்கு நிதி திரட்டி முகக் கவசங்களை வழங்கி வருகிறார். அவரைச் சந்தித்தது 'செய்தி'.

COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்க எது காரணமாக இருந்தது?

நண்பர்களுக்காகக் கைகளைச் சுத்திகரிக்கும் திரவத்தை வாங்க, நான் கடைக்குச் சென்றபோது, அனைத்தும் விற்றுத் தீர்ந்ததை உணர்ந்தேன்.

அப்போது எனது நண்பர் சைஃபுல்லா சொந்தமாகக் கைகளைச் சுத்தம் செய்யும் திரவத்தைத் தயாரிக்கலாம் என்று பரிந்துரைத்தார். COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்க அது எனக்கு உத்வேகமளித்தது.

பிரான்ஸில் நிலைமை மோசமடைந்து வந்ததால் இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் தங்களின் தாய்நாட்டிற்குத் திரும்பத் தயாராகிக் கொண்டிருந்தனர். பயணத்தின்போது கிருமித்தொற்றுக்கு ஆளாகலாம் என்ற அச்சம் அவர்களிடையே நிலவியது. அவர்களது அச்சத்தைப் போக்க எனது சொந்தப் பணத்தைக் கொண்டு KN95 முகக் கவசங்கள் 50 வாங்கினேன்.

3 வாரம் கழித்து முகக் கவசங்கள் வந்துசேர்ந்தன. அந்தச் சமயத்தில் Nantes மருத்துவமனை, சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு முகக் கவசங்கள் தேவை என்று வேண்டுகோள் விடுத்திருந்தது. அதனால், மருத்துவமனைக்கு 40 முகக் கவசங்களை வழங்கினேன். எஞ்சிய 10 முகக் கவசங்களை நண்பர்களோடு பகிர்ந்துகொண்டேன்.

எவ்வாறு நிதித் திரட்டு நடவடிக்கையை மேற்கொண்டீர்கள்?

GoFundMe மூலம் நிதித் திரட்டை மேற்கொண்டேன். அதில் கிடைந்த 100 யூரோவை Toulouse மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினேன். தலைமுடியை மழித்தும் நன்கொடை திரட்டினேன். அதற்காக சொல்லிசைக் காணொளி ஒன்றைத் தயாரித்து வெளியிட்டேன். மொத்தம் 223 KN95 ரக முகக் கவசங்களை மருத்துவமனைகளில் பணிபுரியும் முன்னிலை ஊழியர்களுக்கு வழங்கினேன்.

சிங்கப்பூர் அரசாங்கம், COVID-19 சூழலைச் சமாளிப்பதற்காக சிங்கப்பூரர்களுக்கு வழங்கிய 600 வெள்ளி ரொக்கம் எனது நிதித் திரட்டு முயற்சிகளுக்குப் பேருதவியாக இருந்தது.

எதிர்நோக்கிய சவால்கள்?

மருத்துவமனைகளுக்கு FFP2 சான்றிதழ் பெற்ற தரமான முகக் கவசங்கள் தேவையாக இருந்தன. அவற்றைத் தேடுவது கடினமாக இருந்தது. எனது சொந்த Facebook பக்கத்தில் தொடங்கப்பட்ட நிதித் திரட்டு பாதியில், எனது கணக்கைச் சரிபார்க்கும் சோதனைகளால் தடைபட்டது. அதனால், வசூலாக வேண்டிய பணம் ஓரளவு குறைந்தது.

எதிர்காலத் திட்டங்கள்?

பிரான்ஸில் இந்திய மாணவர்கள் பலர் நிதிப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். அன்றாட உணவைப் பெறுவதில்கூட அவர்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட எண்ணியுள்ளேன்.

இக்கட்டான இந்த நேரத்தில், அனைவரும் கைகோத்தால் எந்தச் சிக்கலுக்கும் எளிதில் தீர்வுகாணலாம் என்கிறார் ரவி சிங்காரம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்