Images
  • slimming
    (படம்: Health Sciences Authority)

எடைக் குறைப்பு மருந்து எனக்கூறி விற்கப்பட்ட பானங்களில் தடை செய்யப்பட்ட மருந்துப் பொருள் : சுகாதார அறிவியல் ஆணையம்

சுகாதார அறிவியல் ஆணையம், எடையைக் குறைக்க உதவுவதாகக் கூறிக்கொள்ளும் 2 பானங்களில், உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட மருந்துப் பொருள் இருப்பதாக எச்சரித்துள்ளது.

Serifa Beauty Solidmolid எனும் சாக்லேட் பானம், LKS Coffee ஆகியவற்றில் “sibutramine” என்னும் மருந்துப் பொருள் கலந்துள்ளதாக ஆணையம் நடத்திய பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட அந்த மருந்துப் பொருள், ஆரோக்கியத்துக்குக் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக் கூடுமென ஆணையம் எச்சரித்தது.

குறிப்பிட்ட பானத்தை அருந்திய வாடிக்கையாளர் ஒருவர், தமது இதயம் வழக்கத்துக்கு மாறாக வேகமாய்த் துடித்ததாகக் கூறியிருக்கிறார்.

இன்னொர், தமது எடை திடீரெனக் குறைந்ததாகவும், பசியே இல்லாமல் போனதாகவும் புகார் கொடுத்திருக்கிறார்.

“sibutramine” என்னும் மருந்துப் பொருளால், மாரடைப்பு, வாதம், தூக்கமின்மை போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என்பதால், 2010ஆம் ஆண்டு அது தடை செய்யப்பட்டது.

குறிப்பிட்ட இருவகை பானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்தும்படி மின்வணிகத் தளங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் பொருள்களை விற்பனை செய்வோருக்கு ஈராண்டுச் சிறையோ 10,000 வெள்ளி வரையிலான அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம். 

Top