Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாசிர் ரிஸ் ரயில் தண்டவாள விபத்தில் இருவர் மாண்டதன் தொடர்பில் SMRT முன்னாள் பொறியாளருக்கு 4 வாரச் சிறைத்தண்டனை

தமது கவனக்குறைவால் இருவருக்கு மரணம் விளைவித்ததை 48 வயது லிம் சே ஹெங் ஒப்புக்கொண்டார்.

வாசிப்புநேரம் -
பாசிர் ரிஸ் ரயில் தண்டவாள விபத்தில் இருவர் மாண்டதன் தொடர்பில் SMRT முன்னாள் பொறியாளருக்கு 4 வாரச் சிறைத்தண்டனை

(படம்: Today)

பாசிர் ரிஸ் ரயில் தண்டவாளத்தில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த விபத்தில் இருவர் மாண்டதன் தொடர்பில் SMRT முன்னாள் பொறியாளருக்கு 4 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமது கவனக்குறைவால் இருவருக்கு மரணம் விளைவித்ததை 48 வயது லிம் சே ஹெங் ஒப்புக்கொண்டார்.

அந்தக் குற்றத்துக்கு ஈராண்டுவரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

ஈராண்டுக்கு முன்னர், மார்ச் மாதம் 22ஆம் தேதி தம்பனீஸ் ரயில் நிலையத்துக்கும் பாசிர் ரிஸ் ரயில் நிலையத்துக்கும் இடையில் சமிக்ஞைக் கோளாறு குறித்து சோதனை நடத்த 15 பேர் கொண்ட குழுவை லிம் வழிநடத்தினார்.

பாதுகாப்பு நிபந்தனையின்படி, சோதனைசெய்ய வேண்டிய இடத்துக்கு ரயிலில் செல்ல வேண்டும்.

ஆனால், லிம் தமது குழுவினரைத் தடத்தின் அருகே இருந்த நடைபாதையில் நடக்க வைத்தார்.

எதிர்வரும் ரயில்களுக்கும் அதுகுறித்து முன்கூட்டியே தகவல் அளிக்கப்படவில்லை.

தம்பனீஸ் ரயில் நிலையத்தில் மட்டும் சோதனை நடவடிக்கை குறித்து கையால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

ரயில் தண்டவாளத்தில் ஊழியர்கள் இருப்பது பற்றி ரயில் ஓட்டுநர்களுக்கு எந்த எச்சரிக்கையும் அதில் குறிக்கப்படவில்லை.

காலை மணி 11.20 அளவில், 25 வயது நஸ்ருலுதின் நஜுமுதீனும் 24 வயது முஹம்மது அஷ்ரஃப் அஹ்மட் புஹாரியும் தண்டவாளத்தில் ரயில் மோதி மாண்டனர்.

புதிதாக வேலைக்குச் சேர்ந்த அந்த இருவரும் வேலை நேரத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தபோது மாண்டனர்.

பிற ஊழியர்களும் லிம்மும் நடைபாதையில் இருந்ததாலோ, தண்டவாளத்தை விட்டுக் குதித்ததாலோ நூலிழையில் உயிர்தப்பினர்.

சம்பவம் நடந்த சில மாதங்களில், லிம்மும் ரயில் ஓட்டுநரும் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.

கட்டுப்பாட்டுச் செயல்பாடுகளுக்குப் பொறுப்புவகித்த இயக்குநர் தியோ வீ கியேட்மீதும் SMRT மீதும் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கு பதிவானது.

SMRT நிறுவனம் 400,000 வெள்ளி அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதுவரை அந்நிறுவன வரலாற்றில் நிகழ்ந்த ஆக மோசமான விபத்தாக அது கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு தியோ 55,000 வெள்ளி அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை அறிந்திருந்தபோதும் அவர், நிலைமையைச் சீர்செய்ய நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்