Images
  • snail

நடைபாதைகளில் நசுக்கப்படும் நத்தைகள்

உலகில் பல்லாயிரக்கணக்கான நத்தை வகைகள் உள்ளன.

அவற்றில் சில, கடலில் வாழ்கின்றன, சில, நிலத்தில் வாழ்கின்றன. சில சமூகத்தினர் நத்தைகளை விரும்பி உண்பதும் உண்டு!

சிங்கப்பூரின் பொது நடைபாதைகளில், நத்தைகள் காணப்படுவது வழக்கமாகி வருகிறது.

இயற்கையான இடங்களில் வாழும் சிறிய நத்தைகள் 3 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. பெரிய நத்தைகள் 10 ஆண்டுகள் வரை உயிர் வாழுமாம்!

(படம்: Kulmalukko, CC BY-SA 3.0, via Wikimedia Commons)


Helix Pomatia எனும் ஒரு வகை நத்தை, வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும்போது 25 ஆண்டுகள் வரை உயிர்வாழும் என்பது பலருக்கும் ஆச்சரியம் தரலாம்.

நத்தைகளின் உடலில் ஒரு வகைத் திரவம் வெளியாகிறது. அதைக்கொண்டு அவை கற்கள் முட்கள் நிறைந்த இடங்களிலும் எளிதில் ஊர்ந்து செல்கின்றன. நத்தையின் உடல் முழுக்கமுழுக்க தசையால் செய்யப்பட்டது.

ஆபத்து நேரும் போது நத்தைகள் அவற்றின் ஓடுகளுக்குள் உடலை இழுத்துக்கொண்டு தப்புகின்றன. 

கடந்த சில ஆண்டுகளாகவே குடியிருப்பு வட்டாரங்களின் நடைபாதைகளில் ஏராளமான நத்தைகள் (snails) மிதிபட்டு மாண்டுகிடப்பதைக் காண முடிகிறது.

அந்த நத்தைகள் எங்கிருந்து வருகின்றன?

அவை ஏன் இந்த அளவுக்கு மிதிபடுகின்றன...

நத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது போல் தெரிகிறதே ஏன்?...

அந்தக் கேள்விளுக்குப் பதிலளிக்கிறார், தேசியப் பூங்காக் கழக, தேசியப் பல்லுயிர் நிலையக் குழும இயக்குநர் ராயன் லீ (Ryan Lee).

  • நத்தைகளின் இயற்கையான வசிப்பிடம்?

கடற்கரைகள், பூங்காக்கள், தோட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நத்தைகளைக் காணலாம். சில நேரங்களில், குடியிருப்புப் பகுதிகளிலும் அவற்றைப் பார்க்க முடியும்.

  • எத்தனை விதமான நத்தைகள் சிங்கப்பூரில் உள்ளன?

ஓடுள்ள, ஓடற்ற என சுமார் 875 வகை நத்தைகள் உள்ளன. மிக அதிகமாகக் காணப்படுவது Singapore Green Snail எனும் வகையைச் சேர்ந்தது. அதன் எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை.

  • குடியிருப்புப் பேட்டைகளிலும் நடைபாதைகளிலும் கடந்த சில ஆண்டுகளாக நத்தைகள் அதிகரித்திருப்பது ஏன்?

பொதுவாக, இருட்டான ஈரத்தன்மையுள்ள இடங்களில் நத்தைகள் வாழும். மழைக் காலங்களில், நத்தைகள் மேலும் எளிதில் நகர்வதற்கு ஈரமான நடைபாதைகள் உதவுகின்றன.
அதனால் அவை அங்கு அதிகமாகக் காணப்படுகின்றன.

  • மக்கள் நடைபாதைகளில் நத்தைகளைக் கண்டால் என்ன செய்யலாம்?

மக்கள் கவனமாக நடந்து சென்றால், நத்தைகளை மிதிப்பதைத் தவிர்க்கலாம்.

அவற்றைப் பாதுகாக்க விரும்புவோர் நடைபாதைகளில் காணப்படும் நத்தைகளை, இலைகளில் ஏற்றி அருகிலுள்ள புல் வெளியில் விடலாம்.  

Top