Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'சூடா ஒரு காபி' - அனுபவத்தைச் சுடச்சுடப் பகிர்ந்துகொள்ளும் உள்ளூர்ப் பிரபலங்கள் சரவணன் அய்யாவு, மாலினி

 "சூடா ஒரு காபி" - அனுபவத்தைச் சுடச்சுடப் பகிர்ந்துகொள்ளும் உள்ளூர்ப் பிரபலங்கள் சரவணன் அய்யாவு, மாலினி

வாசிப்புநேரம் -

உள்ளூர் பிரபலங்கள், COVID-19 காலக்கட்டத்தில் சந்தித்த சவால்களை எப்படிச் சமாளித்தனர் என்பதைப் பகிர்ந்துகொள்ளும் அங்கமும் நிகழ்ச்சியில் உண்டு.

மூன்று அங்கங்கள் கொண்ட 30 நிமிட நிகழ்ச்சியை உள்ளூர்ப் பிரபலங்கள் சரவணன் அய்யாவு, மாலினி இருவரும் உற்சாகமாக வழிநடத்துகின்றனர்.

இருவரும் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்....

இந்த நிகழ்ச்சி பற்றி குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் தங்களிடம் கருத்துத் தெரிவித்தார்களா?

சரவணன்: முதலில் எனது நண்பர்களும் உறவினர்களும் இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்று தான் பார்க்கத் தொடங்கினர்.

அதன் பிறகு நிகழ்ச்சியின் தகவல்களைக் கண்டு பாராட்டுத் தெரிவித்தனர்.

வேலைகள், பாலர் கல்வி போன்ற தலைப்புகளில் அதிக தகவல்கள் இருப்பதை அவர்கள் புரிந்து கொண்டு நன்றிகளைத் தெரிவித்தனர்.

அனைத்து வயதினருக்கும் திட்டங்கள் உள்ளதால் அது பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தைத் தருவதாக என்னிடம் கூறினார்கள்.

பல நிகழ்ச்சிகளை வழிநடத்தியிருக்கிறீர்கள்... இது எந்த வகையில் வித்தியாசமானது ? 

சரவணன்: பொதுவாக நான் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளை வழி நடத்துவேன்.
ஆனால் இந்த நிகழ்ச்சி நமக்குத் தெரிந்த தகவல்களை மேலும் ஆழமாகத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது.

வர்த்தகம், வீடுகள், வேலை, மத்திய சேமநிதி போன்ற தலைப்புகளில் தகவல்கள் இடம்பெற்றது. அது எல்லா வயதினருக்கும் தேவைப்படும் தகவல்கள்.

சரவணனனுடன் நிகழ்ச்சியை வழி நடத்துகிறீர்கள்.....எப்படி இருக்கிறது இந்த அனுபவம்? 

மாலினி: சரவணனுடன் இணைந்து வழி நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி.

நிகழ்ச்சிகளை வழி நடத்துவதில் சரவணன் கைதேர்ந்தவர், அவருடன் பணியாற்றும் போது அவருடைய அனுபவம் என் திறமையை மேம்படுத்தியது.

இந்த நிகழ்ச்சிக்கு சரவணன் வசனங்கள் எழுதியுள்ளார், அது நிகழ்ச்சிக்கு மேலும் வலுச் சேர்த்துள்ளது.

வசனத்தை எங்கு எப்படிச் சொல்ல வேண்டும், எப்போது சொன்னால் அது நகைச்சுவையாக இருக்கும் என்பதை அழகாக அவர் கற்றுக்கொடுத்தார்.

நிகழ்ச்சியில் உள்ளூர் நட்சத்திரங்கள் பலரைச் சந்தித்தீர்கள். அந்த அனுபவம் பற்றி கூறுங்கள்... 

சரவணன்: ஒவ்வோர் உள்ளூர் நட்சத்திரமும் அவரது அனுபவங்களை நிகழ்ச்சியில் கூறியிருந்தனர், அதில் பெரும்பாலானவை எனக்குப் பயனுள்ளதாக இருந்தது.

செய்திகள் மூலம் திட்டங்கள் பற்றி மேலோட்டமாகத் தான் தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் நிகழ்ச்சியில் நமது உள்ளூர் நட்சத்திரங்கள் அவர்களது அனுபவத்துடன் அதைக் கூறும் போது அது நம் மனத்தில் ஆழமாகப் பதிகிறது.

பல நாள்களுக்குப் பிறகு நமது கலைஞர்களை இந்த நிகழ்ச்சி மூலம் சந்தித்ததும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

நிகழ்ச்சியின் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு... 

மாலினி: பாகம் ஐந்தில் ஷாமினி, ஜபூ தீன், சத்ய மூர்த்தி கலந்து கொண்டனர். அவர்கள் வந்தபோது படப்பிடிப்பு ஒரே நகைச்சுவைக் களமாக மாறியது.

சரவணனுக்கு ஈடாக ஜபூ கேலிகள் செய்ய, மற்றவர்கள் சிரிக்க ஏதோ நம் வீட்டு ஒன்றுகூடல் போல் இருந்தது.

நிகழ்ச்சிக்கு வந்த பல பிரபலங்கள் நடிப்பைத் தவிர்த்து மற்ற தொழில்களிலும் இருக்கின்றனர் என்பதைக் கூறும்போது அது வியப்பைத் தந்தது.

எதிர்வரும் பாகங்களில் என்ன எதிர்பார்க்கலாம் ? வளரும் கலைஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட மூன்றாவது அங்கம் பற்றிய உங்கள் கருத்து... 

சரவணன்: நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் விதவிதமான திட்டங்கள் பற்றிப் பேசப்படுவதால் எல்லாப் பாகங்களும் தனிச்சிறப்பு தான்.

வளரும் கலைஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட மூன்றாவது அங்கம் மிக முக்கியமானது.

தற்போது COVID-19 சூழலால் கலைஞர்கள் முன்னைப் போல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை, தற்போது இந்த நிகழ்ச்சி மூலம் அவர்கள் திறமையைக் காட்டும் மேடையாக நிகழ்ச்சி உருமாறியது மகிழ்ச்சியாக உள்ளது.

இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கலைஞர்கள் வளர வேண்டும்.

அரசாங்கத் திட்டங்களில் எது உங்களை அதிகம் ஈர்த்தது ? 

மாலினி: வேலைத்திட்டங்கள் தொடர்பாக இரண்டு தொடர்கள் இருந்தன. அதில் எஸ்ஜி ஒற்றுமை வேலைவாய்ப்புத் திட்டம் (SGUnited Jobs), எஸ்ஜி ஒற்றுமை வேலைப் பயிற்சித் திட்டம் (SGUnited Traineeships) பற்றி நாம் விரிவாக பேசினோம்.
அந்த நிகழ்ச்சி என்னை ஈர்த்தது. எனது நண்பர்கள் வட்டாரத்திலும் அதிகம் பேசப்பட்டது.

அதில் இடம்பெற்ற தகவல்கள் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்ததாக அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

பிப்ரவரி 2ஆம் தேதி முதல் ஒளியேறும் நிகழ்ச்சி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை தொடரும்.நிகழ்ச்சியை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 9:30 மணிக்கு வசந்தம் ஒளிவழியில் காணலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்