Images
  • Srinagar
    படம்: Rajeswari Kandasamy

3 நாட்களாக ஸ்ரீநகரில் சிக்கித் தவிக்கும் சிங்கப்பூரர்கள் - அடுத்து என்ன?

ஸ்ரீநகர்: அடிக்கடி ஏற்படும் மின்தடை, எங்கும் செல்ல முடியாமல் அறைக்குள் அடைபட்டிருக்கும் நிலை.

கடும் பனியால் ரத்து செய்யப்பட்ட விமானச் சேவைகளின் காரணமாக கடந்த மூன்று நாட்களாக ஸ்ரீநகரில் சிக்கித் தவிக்கும் சிங்கப்பூர் சுற்றுப்பயணிகளின் நிலை இது.

சீனப்புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா சென்ற 12 பேர் கொண்ட குழு நேற்று (பிப்ரவரி 7) சிங்கப்பூர் திரும்ப திட்டமிட்டிருந்தது.

ஆனால் புதன்கிழமை, விமான நிலையத்தை அடைந்தபோது விமானச் சேவைகள் தடைபட்டு போயிருந்ததை உணர்ந்தது குழு.

"விமான நிலையத்தில் எங்கும் குழப்பமான நிலை. அங்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்களில் பலர் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்" என்றார் குழுவில் ஒருவரான ராஜேஸ்வரி கந்தசாமி.

பனி குறையும்வரை ஹோட்டலுக்குத் திரும்பியுள்ளது குழு.

"இங்கு வெப்பநிலை உரைநிலைக்குக் கீழ் 3 டிகிரி செல்சியஸாக உள்ளது. ஹோட்டலில் சூடேற்றும் சாதனம் உள்ளது. நேரத்தைக் கழிக்க இங்கு நாங்கள் தொலைக்காட்சி பார்க்கிறோம், விளையாட்டுகள் விளையாடுகிறோம்." என்றார் அவர்.

நாளை மறுநாள் சிங்கப்பூருக்குத் திரும்பலாம் என்று குழு எதிர்பார்க்கிறது.  

Top