Images
  • home
    (படம்: Unsplash.com/Joyce Romero)

வீட்டிலிருந்தே குணமடையும் திட்டத்தின் கீழ் 40 பேர் சொந்த இடங்களிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர் : சுகாதார அமைச்சு

COVID-19 நோயால், பாதிக்கப்பட்டோரில் எத்தனை பேர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டனர், எந்த அடிப்படையில் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் எழுத்து மூலம் பதிலளித்தார்.

COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர், வீட்டில் இருந்தவாறே குணமடையும் நடைமுறை அமெரிக்கா, ஜப்பான் பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது.

நோய்த்தொற்றுக்கு ஆளானோரைப் பராமரிப்பு வசதிகளிலோ, மருத்துவமனைகளிலோ சேர்ப்பதில் சிங்கப்பூர் அதிகக் கவனம் செலுத்துகிறது.

நோய்த்தொற்றுக்கு ஆளாகும் 98 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோருக்கு மிதமானது முதல் இலேசான அறிகுறிகளே உள்ளன. அதனால் அவர்கள் வீட்டில் இருந்தவாறே குணமடையலாம்.

அதன்மூலம் தீவிரமாகப் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க வசதிகள் இருக்கும்.

சிங்கப்பூரில் வீட்டில் இருந்தவாறே குணமடையும் திட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கப்பட்டது.

அதன் கீழ் 40 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

திட்டம் வெற்றியடைந்துள்ளதால் நாளையிலிருந்து (செப்டம்பர் 15) அது விரிவுபடுத்தப்படும்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட 50 வயதுக்கு உட்பட்டோர் இனி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றார் சுகாதார அமைச்சர் ஓங். 

Top