Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சேவை சீருடையில் தொடங்குவதில்லை..மனத்தில் தொடங்குகிறது - கடமைக்கு அப்பால் செயல்படும் இருவர்

பணியைத் தொடங்கினோமா...கடமைகளைச் செய்தோமா...வேலையை முடித்தோமா.

வாசிப்புநேரம் -

பணியைத் தொடங்கினோமா...கடமைகளைச் செய்தோமா...வேலையை முடித்தோமா.

என்ற மனப்பான்மையைக் கொண்டிருக்காமல், கடமைகளையும் தாண்டிப் பணியைச் சிறப்பாகச் செய்ய முனைகின்றனர் சிலர்.

அவர்களில் SMRT ரயில் நிலையங்களில் பணிபுரியும் திருவாட்டி ஜோய் ராஜகோபால், திருவாட்டி கௌரி வீரன் ஆகியோரும் அடங்குவர்.

சிங்கப்பூர்ப் பயணத்துறை விருதுகளின் இறுதிக் கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 77 பேரில் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் போக்குவரத்துத் துறைக்கான சிறப்பு வாடிக்கையாளர் சேவைப் பிரிவின்கீழ் விருதுக்கு முன்மொழியப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் பேசியது, 'செய்தி'.

கடமை என்று எண்ணவில்லை... மனத்தளவில் விரும்பிச் செயல்பட்டேன்.

திருவாட்டி ஜோய்

வயது: 59
வேலையில்: 33 ஆண்டுகள்

(படம்: SMRT)

ரயில் நிலைய மூத்த துணை மேலாளராகப் பணிபுரிகிறார் அவர்.

பயணிகள் ரயிலுக்குள் ஒழுங்காக நுழைகின்றார்களா என்பதை உறுதிசெய்வதும் பயணிகளுக்கு உதவி புரிவதும் அவரது பொறுப்பு.

இருப்பினும், பொறுப்புக்கும் அப்பால், திடீரென்று உடல்நலம் குன்றியவருக்கு உதவி செய்ய விரைந்தார் அவர்.

கடந்த ஆண்டு மே 13-ஆம் தேதியன்று, யீஷூன் ரயில் நிலையத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டி ஒருவர் கீழே விழுந்துவிட்டார்.

மூதாட்டியைப் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்ப டாக்சி ஒன்றை ஏற்பாடு செய்து, அதற்குக் கட்டணமும் செலுத்தினர் திருவாட்டி ஜோயும் அவரது மேலாளரும்.

(படம்: SMRT)

மூதாட்டி வீட்டுக்குச் சென்று சேர்ந்தாரா என்பதை விசாரிக்கத் திருவாட்டி ஜோய், பின்னர் மூதாட்டியின் கணவரைத் தொடர்புகொண்டார்.

இது கடமை என்று எண்ணிச் செய்யவில்லை...அன்புக்குரியவர்களுக்கு ஏதும் நடந்தால், யாராவது உதவி புரியவேண்டுமே என்றுதான் நினைப்போம். அதைத்தான் நான் நினைத்து, மனத்தளவில் செயல்பட்டேன்.

என்று அவர் சொன்னார்.

சேவை, சீருடையில் தொடங்குவதில்லை..மனத்தில் தொடங்குகிறது

திருவாட்டி கௌரி

வயது: 41
வேலையில்: 19 ஆண்டுகள்

(படம்: SMRT)

ரயில் நிலையத் துணை மேலாளராகப் பணிபுரியும் அவர், நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைகள், கருவிகளின் கண்காணிப்பு-போன்றவற்றை மேற்பார்வையிடுகிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதியன்று, டோபி காட் (Dhoby Ghaut) ரயில் நிலையத்தில், ஒரு பயணி, சிறுவன் ஒருவனை அழைத்து வந்தார்.

முன் பின் அறிமுகம் இல்லாத அந்தச் சிறுவன், வெகு நேரமாகச் சுற்றி திரிந்ததாகப் பயணி சொன்னார்.

தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவனை அடையாளம் காணவும், அவனது பெற்றோரைத் தொடர்புகொள்ளவும் திருவாட்டி கௌரி முனைந்தார்.

இருப்பினும், சிறுவன் தன்னைப் பற்றி எதுவும் சொல்ல மறுத்தான்.

சுமார் ஒரு மணி நேரம் பிடித்தது, சிறுவனின் நம்பிக்கையைப் பெற!

அப்போதுதான் சிறுவன், மனம்விட்டுத் திருவாட்டி கௌரியிடம் பேசினான்.

தன் அம்மாவின் தொலைபேசி எண்ணையும் கொடுத்தான்.

தொலைந்துபோன மகனைத் தேடித் திரிந்த தாயாரிடம் பின்னர் சிறுவனை பத்திரமாக ஒப்படைத்தார், திருவாட்டி கௌரி.

சிறுவன், அவருக்கு நன்றி கூறும் வகையில், தான் வரைந்த ஓவியத்தை அன்பளிப்பாக வழங்கினான்.

அது, முன்னிலை ஊழியராக எனக்கு கிடைக்கக்கூடிய அங்கீகாரம்.

என்று திருவாட்டி. கௌரி கூறினார்.

(படம்: SMRT)

சேவை சீருடையில் தொடங்குவதில்லை...
மனத்தில் தொடங்குகிறது என்று திருவாட்டி கௌரி சொன்னார்.

சிறு சிறு செயல்கள்தான், சேகரித்து வைத்தால், ஒட்டு மொத்தமாக மற்றவர்களுக்குப் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது வேலையிடத்திலும் தொடர்கிறது.

என்று திருவாட்டி கௌரி குறிப்பிட்டார்.

சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விருதுகளின் விவரம், இம்மாதம் 23-ஆம் தேதியன்று அறிவிக்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்