Images
  • tourism
    (படம்:AFP)

சிங்கப்பூருக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவர்கள் செய்த செலவு குறைந்தது

சிங்கப்பூருக்கு இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் வந்த பயணிகளின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் கூடியபோதும் அவர்கள் செய்த செலவு குறைந்தது.

சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் அதனைத் தெரிவித்தது.

வெளிநாட்டுப் பயணிகளின் வருகை கடந்த ஆண்டின் அதே காலக்கட்டத்துடன் ஒப்புநோக்க, 8 விழுக்காடு உயர்ந்தது.

ஆனால் பயணிகள் செலவு செய்த தொகை 1.7 விழுக்காடு குறைந்து 6.6 பில்லியன் வெள்ளியானது.

இரண்டாம் காலாண்டில் பயணிகள் உணவு-பானம், பொருள் வாங்குதல் ஆகியவற்றுக்காகக் குறைவான தொகையைச் செலவிட்டதே காரணம்.

இந்த ஆண்டு பயணிகள் பொருள் வாங்குவதற்காகச் செலவிட்ட தொகை 22 விழுக்காடும், உணவு-பானத்துக்காகச் செலவிட்ட தொகை 15 விழுக்காடும் குறைந்தன.

ஆனால் ஹோட்டலில் தங்குவதற்காகப் பயணிகள் செலவு செய்த தொகை 9.4 விழுக்காடு அதிகரித்து 1 பில்லியன் வெள்ளியை எட்டியது.

சிங்கப்பூருக்கு வந்த பயணிகளில் இந்தியா, சீனா, இந்தோனேசியா-ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே ஆக அதிகமாகச் செலவு செய்தனர்.

மொத்த வருமானத்தில் அந்த மூன்று நாட்டைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு 45 விழுக்காடு.

அதில், ஊர் சுற்றிப் பார்த்தல், பொழுதுபோக்கு, விளையாட்டு-ஆகியவற்றுக்காகச் செலவிட்ட தொகை அடங்காது.

 

Top