Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நாலு விதமாகப் பேசும் நால்வரைப் பற்றிக் கவலைப்படாமல் படிப்பைத் தொடர்ந்தவர்

வாழ்க்கையில் பல தடைக்கற்கள் வந்தாலும், அவற்றைப் படிக்கற்களாக மாற்ற வேண்டும் என்பார்கள்.

வாசிப்புநேரம் -

வாழ்க்கையில் பல தடைக்கற்கள் வந்தாலும், அவற்றைப் படிக்கற்களாக மாற்ற வேண்டும் என்பார்கள்.

இதை மந்திரமாக எடுத்துக்கொண்டு சாதித்தவர்கள் பலர். அப்படிப்பட்ட ஒருவர் திரு ஸ்டீஃபன் சூர்யா.

33 வயதாகும் திரு சூர்யா, பல சவால்களைத் தாண்டி, கல்வியைக் கைவிட்ட 15 வருடத்திற்குப் பிறகு பட்டயச் (Diploma) சான்றிதழைப் பெற்றிருக்கிறார்.

அவரது விடாமுயற்சி குறித்துக் கேட்டறிந்தது, 'செய்தி'.

18-ஆவது வயதில், குடும்பத்தின் நிதிச் சிக்கல் காரணமாகத் திரு சூர்யா படிப்பை நிறுத்தவேண்டிய சூழல்.

மேலும் பள்ளிக் கட்டணம், தினசரிப் போக்குவரத்து, சாப்பாட்டுச் செலவுகளுக்குப் பணம் திரட்ட சிரமப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

படிப்பை நிறுத்தியபின், அம்மாவின் கடையில் வடை விற்க உதவினார்.

என்னதான், வேலை செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாலும், படிப்பை நிறுத்திவிட்டோம் என்ற மனக்குறை திரு சூர்யாவுக்கு இருந்துகொண்டே இருந்தது.

கல்வி வாழ்க்கையிலிருந்து 10 ஆண்டுகள் விலகி இருந்தபின், திரு சூர்யா, தனது பட்டயக் கல்வியைத் தொடர பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்தார்.

அந்த 5 வருடக் கல்விப் பயணத்தில் திரு சூர்யா பல சிரமங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்தார். இதற்கிடையில் இருமுறை வர்த்தகத்தில் தோல்வி கண்டார்; பண மோசடிக்குப் பலியானர்; மனச்சோர்வால் பாதிக்கப்பட்டார். வாழ்க்கை அவரைப் புரட்டிப் போட்டது.

ஆனால் துவண்டுவிடவில்லை.

படிப்பையும் வேலையையும் ஒருசேரச் சமாளிக்க மிகவும் கடினமாக இருந்தது. வேலை முடிந்து இரவு 10 மணிக்கு வீடு திரும்புவேன். பின் விடியற்காலை 5 மணி வரை படித்து விட்டு மீண்டும் வேலைக்குச் செல்வேன். சில சமயங்களில் என் வேலை நேரங்களின் போது வாகனத்தில் கூடப் படிப்பேன்.

என்றார் அவர்.

10 வருடம் கழித்து, மீண்டும் கல்வியைத் தொடரத் தயக்கமாக இருந்தது. ஆனால் கனவு நனவாக, நமது பயணத்தை ஏதாவது ஒரு இடத்திலிருந்து தொடரத்தான் வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து, நமது இலக்கை அடையச் செயல்பட வேண்டும்.

என்று தமது மனத்தில் வேரூன்றிய நம்பிக்கையைப் பகிர்ந்துகொண்டார்.

பல முறை விட்டுவிடுவோம் என்று தோன்றியிருக்கிறது. ஆனால் என் மனைவி, தாய் இருவரின் தூண்டுதல் உறுதுணையாக இருந்தது.

"இந்தச் சான்றிதழைக் கொண்டு நான் வேலையில் சேரப்போவதில்லை. ஆனால் நான் பெற்ற அறிவும், இது அளிக்கும் மனத் திருப்தியும் மிகப் பெரிது." என்றார் திரு சூர்யா.

பணச் சிக்கல், குடும்பச் சிக்கல், மன உளைச்சல், சமுதாயக் கண்ணோட்டம், 'அந்த நால்வர் என்ன சொல்வார்கள்' என்ற பயம் - இவை அனைத்தையும் தாண்டி, நம் வாழ்க்கை நம் கையில் என்ற முனைப்புடன் செயல்படவேண்டும் என்பதைத் திரு சூர்யாவின் பயணம் எடுத்துக்காட்டியது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்