Images
  • panic
    (படம்: Reuters/Edgar Su)

"அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவித்த போக்கு தேசிய அளவிலான இருப்பை அதிகம் பாதிக்கவில்லை": அமைச்சர் சான் சுன் சிங்

சிங்கப்பூரில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவித்த அண்மைப் போக்கு தேசிய அளவிலான இருப்பை அதிகம் பாதிக்கவில்லை என வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

நாடுகள் எல்லைகளை மூடினாலோ உணவு விநியோகம் பாதிக்கப்பட்டாலோ அதைச் சமாளிக்க நாடு எந்த அளவுக்குத் தயார்நிலையில் உள்ளது என்பதை அவர் விளக்கினார்.

மீடியாகார்ப் நிறுவனத்தின் Talking Point நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணலில் திரு. சான் அதுகுறித்துப் பேசினார்.

தேசிய இருப்பின் அளவை அரசாங்கம் தொடர்ந்து மறுஆய்வு செய்துவருவதாகத் திரு. சான் குறிப்பிட்டார்.

இதற்குமுன் குறுகியகால நெருக்கடியைக் கருத்தில்கொண்டு இருப்பின் அளவு திட்டமிடப்பட்டு வந்ததை அவர் சுட்டினார்.

இப்போது இந்த உலகளாவிய நெருக்கடி தொடங்கியதிலிருந்தே தேசிய இருப்பு மறுஆய்வு செய்யப்பட்டு வந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

விநியோகத் தொடர்புகள் நீண்டகாலத்துக்குப் பாதிக்கப்பட்டால் அதற்குத் தயாராக இருக்கும் விதத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவிக்கவேண்டியதில்லை என்று திரு. சான் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.

தற்போதைய சூழலில் அதிகமான சிங்கப்பூரர்கள் அமைதி காப்பது மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் நம்பிக்கையூட்டும் விதத்திலும் அமைவதாகத் திரு. சான் கூறினார்.

Top