Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கதை கேளு கதை கேளு- காலத்தால் அழியாத கதை சொல்லும் கலை

நம்மில் பலருக்குச் சிறு வயதில் நம் தாத்தா பாட்டி, அப்பா அம்மா சொன்ன கதைகள் நினைவிருக்கலாம்.  அவற்றிலிருந்து கற்றுக்கொண்ட நன்னெறிகள் அவ்வப்போது நினைவுக்கு வரலாம். 

வாசிப்புநேரம் -

நம்மில் பலருக்குச் சிறு வயதில் நம் தாத்தா பாட்டி, அப்பா அம்மா சொன்ன கதைகள் நினைவிருக்கலாம். அவற்றிலிருந்து கற்றுக்கொண்ட நன்னெறிகள் அவ்வப்போது நினைவுக்கு வரலாம்.

முற்றிலும் இணையத்தைச் சார்ந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில் கதை சொல்லும் வழக்கமும், கதை கேட்கும் வழக்கமும் குறைந்துவருகிறது.

ஆனால் சிங்கப்பூர் போன்ற நவீனமடைந்து வரும் ஆசிய நாடுகளில், கலாசாரம், வரலாறு போன்றவை, கதைகளின் மூலம் வளர்ச்சி பெறுகின்றன; தொடரவும் செய்கின்றன. எனவே அந்தக் கலையைக் கட்டிக்காப்பது அவசியமாகிறது.

கதை சொல்லும் கலையை வளர்க்க, The Storytelling Centre Limited, The Arts House ஆகியவை இணைந்து சென்ற மாதம் 20 ஆம் தேதி முதல் இம்மாதம் 11 தேதி வரை StoryFest 2021 என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

5ஆம் ஆண்டாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, கிருமிப்பரவல் சூழலால் இவ்வாண்டு, முழுக்கமுழுக்க இணையம் வழி நடத்தப்படுகிறது.

இவ்வாண்டின் நிகழ்ச்சிக் கருப்பொருள் "ReStory". நமக்குப் பழக்கமான சூழலை, வாழ்க்கையைப் போற்றவும், எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் கதைகளைக் கற்பனை செய்யவும் அது ஊக்குவிக்கிறது.

நிகழ்ச்சியின் புத்தாக்கத் தயாரிப்பாளர், கதை சொல்லும் நிபுணர் காமினி ராமச்சந்திரன் கதை சொல்லும் கலை பற்றி 'செய்தி'-உடன் பகிர்ந்துகொண்டார்.

தமது தாத்தாவும், குடும்பத்தினரும் சொன்ன பல கிராமிய இந்தியக் கதைகள், தாம் இன்று ஒரு கதை சொல்லும் நிபுணராகத் தூண்டுதலாக அமைந்ததாகச் சொன்னார் அவர்.

ஒருவரின் சிறுவயதில் இயல்பான பகுதியாக விளங்குகின்றன கதைகள். ஆனால் காலம் செல்லச் செல்லக் கதை சொல்வதிலும், கேட்பதிலும் ஆர்வம் குறைகிறது.

கதை சொல்லும் திறன் மிக எளிதாக ஒருவருக்கு அமைவதில்லை. வெவ்வேறு கலாசாரங்களின் பாரம்பரியக் கதைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். மேலும், கதைசொல்வோர் எப்படிக் கதைகளைப் படைக்கின்றனர் என்பதைக் கவனிப்பதும் முக்கியம்.

கதைகளைக் கேட்போர் நீண்ட காலம் கழித்து அதை நினைவுகூரும்போது, கதை அவர்கள் மனத்தில் எவ்வளவு ஆழமாக பதிந்திருக்கிறது என்பது தெரியும்; அது ஆனந்தம் அளிக்கும் என்கிறார் காமினி.

கதை சொல்வதும், கேட்பதும் ஒருவரின் தன்னம்பிக்கையையும், மொழித்திறனையும், புரிதலையும், புரியவைக்கும் ஆற்றலையும் மேம்படுத்துகிறது.

நவீன உலகில் அதற்கொரு முக்கிய இடமுண்டு; கதை சொல்வதும், கேட்பதும் கலாசாரம், வரலாறு, மொழி போன்றவற்றுக்குப் பாலமாக அமைவதாகச் சொல்கிறார் காமினி.

மேல் விவரங்களுக்கு https://storyfestsg.com/2021/programmes/restory-celebrating-the-feminine-in-folklore இணையவாசலை நாடலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்