Images
  • surgery
    (படம்:  AFP / LUIS ROBAYO)

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடனடி சிகிச்சை பெறத் தவறிய நோயாளிகள் இனி முழுமையாகக் குணமடைய வாய்ப்பு

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடனடி மருத்துவ சிகிச்சை பெறத் தவறிய நோயாளிகளுக்கு இனி முழுமையாகக் குணமடையும் வாய்ப்பு உண்டு.

மூளையில் ஏற்பட்டுள்ள ரத்தக் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை 6 மணிநேரத்துக்குள் மேற்கொள்ளப்படவேண்டும்.

மருத்துவர்கள் இனி பரிந்துரைக்கப்பட்ட காலத்துக்குப் பிறகும் அதனை மேற்கொள்ளலாம்.

அவ்வாறு செய்வது நோயாளி குணமடையும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

பக்கவாதம் ஏற்பட்டு 6 மணிநேரம் கழித்து நீங்கள் பெறும் மருத்துவ சிகிச்சை பலனளிக்கும் வாய்ப்புகள் குறைவு.

பக்கவாதம் ஏற்பட்டவுடன் மூளையில் உள்ள திசுக்கள் செயலிழக்கத் தொடங்கும்.

6 மணிநேரத்துக்குப் பிறகு திசுக்கள் முற்றிலுமாகச் சேதமடைந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

ஆனால், மேம்பட்ட சோதனைகளின் மூலம், அறுவை சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகளை அடையாளங்காணமுடியும்.

6 மணி நேரத்துக்குப் பிறகு வருவோரில் ஒன்றிலிருந்து 3 விழுக்காட்டினர் மட்டுமே அறுவை சிகிச்சைக்குத் தகுதி பெறுவர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நோயாளிகளின் வயது, பக்கவாதம் ஏற்படுவதற்கு முந்திய உடல் சுகாதாரம் போன்றவை கருத்திற்கொள்ளப்படும்.

சிங்கப்பூரில் ஆண்டுக்கு 8ஆயிரம் பேருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது.

எனினும், முழுமையாகக் குணமடைவதற்கு ஆகச் சிறந்த வாய்ப்பு, ஆரம்பக்கட்ட சிகிச்சை மூலமே கிட்டும் என்று கூறப்படுகிறது. 

Top