Images
  • indranee (1)
    (கோப்புப் படம்: Mediacorp)

'உலகளாவிய விநியோகத் தொடரில் முக்கிய பங்கை ஆற்ற வட்டார நாடுகள் தங்கள் முயற்சியை இரட்டிப்பாக்க வேண்டும்'

உலகளாவிய விநியோகத் தொடரின் முக்கிய அங்கமாகத் தொடர்ந்து திகழ, வட்டார நாடுகள் தங்கள் முயற்சியை இரட்டிப்பாக்க வேண்டும்; அவை இணைப்புகளைத் தொடர்ந்து வலுப்படுத்தவேண்டும் என்று இரண்டாம் நிதியமைச்சர் இந்திராணி ராஜா கூறியுள்ளார்.

துறைமுகங்கள், சாலைகள் போன்ற நல்ல தரமான உள்கட்டமைப்புகளில் அவை முதலீடு செய்யவேண்டும் என்றார் அவர்.

இணையம் வழி நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் குமாரி இந்திராணி ராஜா பேசினார்.

ASEAN +3 வட்டாரம் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சினைகள் குறித்துக் கருத்தரங்கில் கலந்துபேசப்பட்டது.

தொழில்நுட்ப நெருக்கடிகள், உலக அளவில் விநியோகத் தொடர்கள் கண்டுவரும் உருமாற்றம் ஆகியவை அவற்றுள் சில.

ASEAN +3 என்பது 10 ஆசியான் நாடுகளுடன் சீனா, ஜப்பான், கொரியா ஆகியவற்றை குறிக்கிறது.

தன்னிச்சையாகச் செயல்படுவதைக் காட்டிலும், ஒருவரை ஒருவர் சார்ந்து இயங்கும் போக்கு, விநியோகத் தொடருக்குப் பன்முகத்தன்மையையும் மீள்திறனையும் வழங்கும் என்றார் குமாரி இந்திராணி.

வட்டாரரீதியான தடையற்ற வர்த்தக உடன்பாடுகளில் பங்கெடுப்பதும் அதற்கு உதவும்.

RCEP எனப்படும் ஒருங்கிணைந்த வட்டாரப் பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

உடன்பாட்டுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அது நடப்புக்கு வரவிருப்பதைக் காணத் தாம் ஆவலாய் இருப்பதாகக் குமாரி இந்திராணி தெரிவித்தார்.
   

Top