Images
  • swallow

விழுங்கக்கூடாததை விழுங்கினால் என்ன செய்வது?

உடைந்த கரண்டிகள், பொய்ப் பற்கள், ஊசிகள்...இவற்றையெல்லாம் விழுங்கியவர்களுக்கு சிகிச்சை பார்த்திருக்கிறார் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் டாக்டர் கெர் லியாங்.

ஒருநாளில் சுமார் 10 பேர் விழுங்கக்கூடாதவற்றை விழுங்கியதால் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருவதாக அவர் கூறினார். பெரும்பாலும் உதடுகளுக்கு இடையே வைத்திருக்கும் பொருட்களை அறியாமல் விழுங்கிவிடுவர் சிலர்.

விழுங்கக்கூடாததை விழுங்கியதால் கூ டெக் புவாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற ஆண்டுக்குச் சுமார் 138,000 பேர் வருகின்றனர்.

அவர்களில் பெரும்பாலோர் சிறுவர்களாகவும் குழந்தைகளாகவும் இருப்பதாகக் கூறுகிறார் டாக்டர் கெர்.

சில சமயங்களில் பொருட்களை விழுங்குவதால் மூச்சடைப்பு ஏற்பட்டு சுமார் 6 நிமிடங்களில் உயிரிழக்க நேரிடலாம்.

ரத்த வாந்தி, நெஞ்சு வலி, வயிற்று வலி அல்லது மலத்தில் ரத்தக் கசிவு ஏற்படலாம். அப்போது உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

சில சமயங்களில் விழுங்கக்கூடாதவற்றை விழுங்கியவர்களை எதிர்நோக்கினால் கீழ்க்காணும் சிலவற்றைச் செய்துபார்க்கலாம் என்று டாக்டர் கெர் ஆலோசனை கூறுகிறார்.

- பாதிக்கப்பட்டவரின் பின்னால் ஒரு பக்கமாக நின்றுகொண்டு அவரை முன்னால் குனியவைத்து, நெஞ்சுப் பகுதியை ஒரு கையால் தாங்கவும்.

- உள்ளங்கையின் கீழ்ப்பகுதியைக் கொண்டு தோள் பட்டைகளுக்கு நடுவே 5 முறை அழுத்தவும்.

அவை பயனளிக்கவில்லை என்றால்...

- பாதிக்கப்பட்டவருக்குப் பின்னால் நின்றுகொண்டு கைகளை அவரது இடுப்பைச் சுற்றி அணைக்கவும்
- அவரின் தொப்புளுக்கு மேல் கைகளை வைத்து 5 முறை அழுத்தவும்.

இவை எதுவுமே பயனளிக்கவில்லை என்றால் உடனடியாக அவசர சிகிச்சையை நாட வேண்டும் என்கிறார் டாக்டர் கெர்.
 

Top