Images
  • TCM
    (படம்: Google Maps street view)

சீனப் பாரம்பரிய சிகிச்சையால் மூக்கு வளைந்ததாக குற்றச்சாட்டு, மருத்துவர் தற்காலிகப் பணி நீக்கம்


மூக்கில் செய்த சிகிச்சையினால் அது வலப் பக்கமாக வளைந்துவிட்டது என்ற நோயாளியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து பாரம்பரிய சீன மருத்துவர் ஒருவர் ஓராண்டுக்கு மருத்துவராகச் செயல்படுவதிலிருந்து தற்காலிகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அங் மோ கியோ அவென்யூ 6இல் அமைந்திருக்கும் Angsan Chinese Physician and Medical Hall எனும் மருந்தகத்தைச் சேர்ந்த ஆங் டிக் வா, முறையான சிகிச்சை முறையைப் பயன்படுத்தவில்லை என்று பாரம்பரிய சீன மருத்துவர்களுக்கான வாரியம் தெரிவித்துள்ளது.

2015 ஜூலை மாதத்துக்கும் மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் மூக்கில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்காக நோயாளி சிலமுறை சிகிச்சைக்காக ஆங்கிடம் சென்றிருக்கிறார்.

மெல்லிய கம்பியால் நோயாளியின் மூக்கில் ஏதோ ஒருவகை சிகிச்சை செய்திருக்கிறார் ஆங்.

ஆங் தவறான சிகிச்சை அளித்ததாக நோயாளி 2017இல் புகார் செய்தார்.

ஆங்கின் சிகிச்சை முறையால்தான் நோயாளியின் மூக்கு வளைந்தது என்பதற்குப் போதிய ஆதாரம் இல்லை என்று விசாரணைக் குழு குறிப்பிட்டது.

ஆனால் நோயாளிக்குச் சிகிச்சை வழங்குவதற்கு முன், அவரை முறையாகச் சோதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஆங் ஒப்புக்கொண்டார்.

மேலும் அவர் சீனப் பாரம்பரிய சிகிச்சைக்கு பதிலாக, மேற்கத்திய அலோபதி முறையிலான சிகிச்சையை மேற்கொண்டதாகவும் விசாரணைக் குழு சந்தேகிக்கிறது.

ஆங், மூக்கில் பயன்படுத்திய மருந்து என்னவென்பதைத் தெரிவிக்க மறுத்தது அதற்குக் காரணம்.

மேலும் குழுவின் விசாரணையின்போது ஆங் ஒத்துழைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதனால் அவருக்கு ஓராண்டு தற்காலிகத் தகுதி நீக்கமும் 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

Top