Images
  • gavel
    ( படம்: AFP )

நண்பர்களுடன் தேநீர் அருந்த ஒன்றுகூடியதாக 10 பேர் மீது குற்றச்சாட்டு

வாடகை வீடு ஒன்றில் தேநீர் அருந்தியபடி நண்பர்களுடன் படிப்பது, உரையாடுவது போன்ற நவடிக்கைகளுக்காக ஒன்றுகூடிய ஏழு ஆடவர்கள், மூன்று பெண்களின்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்ட விதிமுறைகளை மீறி ஒன்றுகூடியதாக அவர்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

34A கிம் கியெட் ரோட்டில் வசித்த மூவரும், இம்மாதம் 5ஆம் தேதி காலையில் மற்ற ஏழு பேரைத் தங்கள் வீட்டிற்கு அழைத்திருந்தனர்.

தற்போது நடப்பிலுள்ள கட்டுப்பாடுகளின்படி மற்ற வீடுகளில் வசிக்கும் நபர்களை வீட்டுக்கு வரவழைப்பதும், மற்றவர்களின் வீட்டிற்கு அத்தியாவசியமற்ற காரணங்களுக்காகச் செல்வதும் சட்டப்படி குற்றம். அத்தகைய விதிமுறைகளை மீறும் நபர்கள் அதிகபட்சமாக 10,000 வெள்ளி அபராதத்தோடு ஆறு மாதச் சிறைத்தண்டனையையும் எதிர்நோக்குவர்.

குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரும் இந்தியக் குடிமக்கள். அவர்கள் 33 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் .

பள்ளிப் பாடத்திற்கு உதவி பெற நண்பரின் வீட்டிற்குச் சென்றதாகவும் சிங்கப்பூரின் சட்டதிட்டங்களை மீறுவது தமது நோக்கமல்ல என்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான Bhullar Jasteena கூறினார்.

மாணவரான தம்மிடம், பெருந்தொகையை அபராதமாகச் செலுத்தப் போதிய பணம் இல்லை என்றும் அவர் கூறினார்.

Bhullarஐத் தவிர மற்ற 9 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவுள்ளனர்.

அடுத்த மாதம் அவர்களது வழக்கு, மீண்டும் விசாரணைக்குவரும்.  

Top