Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தெம்புசு மரம் விழுந்து மாது மரணம் - விசாரணை முடிவடைந்துள்ளது

பூமலையில் சென்ற ஆண்டு பிப்ரவரியில் தெம்புசு மரம் விழுந்து 38 வயது மாது மரணமடைந்தார்.

வாசிப்புநேரம் -
தெம்புசு மரம் விழுந்து மாது மரணம் - விசாரணை முடிவடைந்துள்ளது

கோப்புப் படம்

சிங்கப்பூர்ப் பூமலையில் தெம்புசு மரம் விழுந்து மாது மரணமடைந்ததன் தொடர்பில் விசாரணை முடிவடைந்துள்ளது.

பூமலையில் சென்ற ஆண்டு பிப்ரவரியில் தெம்புசு மரம் விழுந்து 38 வயது மாது மரணமடைந்தார்.

இந்திய நாட்டவரான ராதிகா அங்காரா தமது கணவர், ஒரு வயது இரட்டைக் குழந்தைகளுடன் பூமலை சென்றிருந்தார்.

அப்போது 40 மீட்டர் தெம்புசு மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது. அதில் மாதின் குடும்பத்தினரும் மேலும் ஒருவரும் காயமடைந்தனர்.

4 நாள் விசாரணை சுமார் 9 மாதகாலமாக நடத்தப்பட்டு வந்துள்ளது.

270 ஆண்டுப் பாரம்பரியமிக்க மரம் விழுந்ததற்கான காரணம் அதில் ஆராயப்பட்டது.

2016 செப்டம்பரில் சோதனையிடப்பட்டபோது மரம் நல்லநிலையில் இருந்ததும் தெரியவந்தது.

பூமிக்கடியில் வெகு ஆழத்தில் மரத்தின் 70 முதல் 75 விழுக்காட்டு வேர்கள் அழுகிப்போயிருந்தது விசாரணையின் முடிவில் தெரியவந்தது.

மரத்தின் சேதம்குறித்த எந்த அடையாளமும் வெளியில் தெரியவில்லை என்றும் மரம் பெயர்ந்து விழுந்தபோதுதான் வேர்கள் பட்டுப்போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்தது.

விசாரணையின் இறுதி நாளான இன்று திருவாட்டி அங்காராவின் தந்தை தமது மகளின் இழப்புகுறித்து ஓரிரு வார்த்தைகள் பேசினார்.

'ஓர் இளம் தாய் குழந்தைகளுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழித்த மகிழ்ச்சியான நாள் அது' என்று அவர் குறிப்பிட்டார்.

தேசியப் பூங்காக் கழகம் விழிப்புடன் இருந்திருந்தால் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று அவர் சொன்னார்.

இன்றைய விசாரணையில் திருவாட்டி அங்காராவின் தாய், சகோதரி, கணவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தாயைப் பறிகொடுத்த இரட்டை ஆண் குழந்தைகளுக்குத் தங்கள் தாயின் நேசத்தை உணர வாய்ப்பே இல்லை என்று குடும்பத்தினர் வருத்தத்துடன் கூறினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்