Images
  • rice

சிங்கப்பூர் தாய்லந்திலிருந்து இறக்குமதி செய்யும் அரிசிக்குப் பதில் மாற்று ஏற்பாடு செய்யமுடியும்

(வாசிப்பு நேரம்: 2 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூர் தாய்லந்திலிருந்து இறக்குமதி செய்யும் அரிசிக்குப் பதில் மாற்று ஏற்பாடுகளை எளிதாகச் செய்யமுடியும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு கூறியிருக்கிறது.

தாய்லந்தில் கடும் வறட்சி நிலவுவதாக அண்மை அறிக்கைகள் கூறுவது பற்றி CNA எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சு அவ்வாறு பதிலளித்தது.

வறட்சியால் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கைகள் குறிப்பிட்டிருந்தன.

தாய்லந்தின் சென்ற ஆண்டுக்கான மொத்த அரிசி ஏற்றுமதியில் சிங்கப்பூர் சுமார் ஒன்றேகால் விழுக்காடு மட்டுமே பங்குவகிப்பதை அமைச்சு சுட்டியது.

கடந்த சில ஆண்டுகளாகவே, சிங்கப்பூர் பரவலாக்கும்-உத்தியில் கவனம் செலுத்திவந்துள்ளது.

அரிசியைப் பொறுத்தவரை தாய்லந்து, வியட்நாம், இந்தியா, மியன்மார், கம்போடியா, ஜப்பான், அமெரிக்கா எனப் பல நாடுகளிடமிருந்து சிங்கப்பூர் இறக்குமதி செய்துவருகிறது.

அவற்றில் அமெரிக்கா போன்ற சில நாடுகளில் உற்பத்தி நன்றாகவே இருப்பதால் சிரமமில்லை என்று அமைச்சு கூறியது.

அரிசி சேமிப்புத் திட்டத்தின்கீழ், விநியோகம் தடைபட்டாலும் சந்தையில் போதிய அளவு அரிசி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.

அரசாங்கம் குறிப்பிடும் கிடங்குகளில் 2 மாதங்களில் இறக்குமதியாகும் அளவு அரிசியைச் சேமித்துவைக்கும்படி இறக்குமதியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Top