Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புகையிலைப் பொருள் பொட்டலங்கள் அனைத்திலும் சுகாதார எச்சரிக்கை இன்னும் பெரிதாக அச்சிடப்படும்

சிங்கப்பூரில் விற்பனையாகும் அனைத்துப் புகையிலை பொருள் பொட்டலங்களில் உள்ள சுகாதார எச்சரிக்கை, நாளை மறுநாள் முதல், இன்னும் பெரிய அளவில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு அது பொருந்தும். 

வாசிப்புநேரம் -
புகையிலைப் பொருள் பொட்டலங்கள் அனைத்திலும் சுகாதார எச்சரிக்கை இன்னும் பெரிதாக அச்சிடப்படும்

(படம்: Ministry of Health)

சிங்கப்பூரில் விற்பனையாகும் அனைத்துப் புகையிலை பொருள் பொட்டலங்களில் உள்ள சுகாதார எச்சரிக்கை, நாளை மறுநாள் முதல், இன்னும் பெரிய அளவில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு அது பொருந்தும்.

புகையிலைக் கட்டுப்பாட்டு முயற்சிகளின் தொடர்ச்சியாக, அந்த மாற்றம் நடப்புக்கு வருகிறது.

இதுவரை புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதோர் அதனைத் தொடங்குவதைத் தவிர்க்கவும், ஏற்கெனவே புகைபிடிப்போர் அந்தப் பழக்கத்தைக் கைவிட ஊக்குவிக்கவும், புகையிலையற்ற வாழ்க்கை முறையை சிங்கப்பூரர்கள் பின்பற்றவும் அந்த மாற்றம் உதவும் என்று நம்பப்படுகிறது.

2018ஆம் ஆண்டு, சுகாதார அமைச்சு உள்ளூர், அனைத்துலக ஆய்வுகளைப் பரிசீலித்தபிறகு அக்டோபர் மாதம் பொட்டலங்களில் உள்ள படங்களின் அளவு குறித்த பொதுக் கலந்துரையாடல்களை நடத்தியது.

கடந்த ஆண்டு விளம்பர, விற்பனைக் கட்டுப்பாட்டின்கீழ், அனைத்து விதமான புகையிலைப் பொருள்கள் தொடர்பான சட்டங்கள், புதிய விதிமுறைகளோடு திருத்தப்பட்டன.

ஜூலை மாதம் முதல் தேதி நடப்புக்குவரும் மாற்றங்களின்கீழ், புகையிலைப் பொருள்களுக்கான பொட்டலங்களில் படங்கள், சின்னங்கள், விளம்பரத் தகவல்கள் போன்றவை அகற்றப்பட்டிருக்க வேண்டும்.

வணிகச் சின்னமும், புகையிலை வகையும் குறித்த விவரங்கள், குறிப்பிட்ட வண்ணத்திலும் வடிவத்திலும் இடம்பெறத் தடையில்லை.

பொட்டலங்களில் அச்சிடப்பட்டிருக்கும் சுகாதார எச்சரிக்கையின் குறைந்தபட்ச அளவு, தற்போதுள்ள 50 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காட்டுக்கு அதிகரிக்கப்பட வேண்டும்.

மேல்விவரங்களை, https://www.hpb.gov.sg/healthy-living/substance-abuse/standardised-packaging-guidance-booklet என்னும் இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்