Images
  • tourism merlion
    (படம்: REUTERS/Edgar Su)

'தொழில்நுட்பம், நீடித்த நிலைத்தன்மை ஆகியவை பயணத்துறைக்கு நீண்டகாலத்தில் அதிக வாய்ப்புகளை வழங்கும்'

தொழில்நுட்பமும் நீடித்த நிலைத்தன்மையும் பயணத்துறைக்கு நீண்டகாலத்தில் அதிக வாய்ப்புகளை வழங்குவதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) கூறியுள்ளார்.

COVID-19 கிருமிப்பரவல் சூழலுக்கு இடையே தொழில்நுட்பம் கொண்டு தாங்கள் செயல்படும் முறையை மாற்றியமைத்து வருகின்றனர் சுற்றுலாத் துறையினர்.

மின்னிலக்கமயமாதலும் தொழில்நுட்ப முறைகளும் கிருமிப்பரவல் சூழலுக்கு முன்னரே சுற்றுலாத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியதாகத் திரு. சான் கூறினார்.

எனினும் வர்த்தகங்களும் மக்களும் தொடர்புகொள்ளும் முறை கிருமிப்பரவல் சூழலில் வெகுவாக மாற்றம்கண்டுள்ளதை அவர் குறிப்பிட்டார்.

ஆண்டுதோறும் நடக்கும் உணவுத் திருவிழா இப்போது இணையத்தில் நடத்தப்படுகிறது. இருந்த இடத்திலிருந்தே, மெய்நிகர் வழிகளில் பல இடங்களைச் சுற்றிப்பார்க்கலாம். அதோடு புதிர்களுக்கு விடை தேடும் போட்டிகள் போன்றவற்றைச் சுட்டினார் அவர்.

சிங்கப்பூர்ப் பயணத்துறையின் வருடாந்திரத் தொழில்துறை மாநாட்டில் திரு. சான் பேசினார்.

பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப தரமான அனுபவங்களை வழங்குவது பயணத்துறையின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாகக் கருதப்படும் என்றார் அவர்.

பயணிகளின் அனுபவங்களைப் புதுப்பிக்கத் தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

Tcube எனும் புதிய தளத்தை அவர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

பயணத்துறை சார்ந்த நிறுவனங்கள் மின்னிலக்க உருமாற்றத்தை மேற்கொள்ள அது உதவும் என்றார் அவர்.

புத்தாக்கச் சிந்தனைகளைச் செயல்படுத்துவது, தங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது, சம்பந்தப்பட்ட மற்ற தரப்புகளைச் சந்திப்பது எனப் பல வழிகளில் Tcube உதவும் என்று நம்பப்படுகிறது.

பயணத்துறை வளர்ச்சித் திட்டத்தை மேலும் ஈராண்டுக்கு நீட்டிக்கவிருப்பதாய்ப் பயணத்துறைக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கீத் டான் தெரிவித்தார்.

பயணத்துறை சார்ந்த ஆற்றல் மேம்பாட்டுத் திட்டமும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பயணத்துறையில் பணிபுரிவோர், கிருமிப்பரவல் சூழலுக்கு அப்பால் வேலை செய்வதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள கைகொடுப்பது அதன் நோக்கம். இந்த ஆண்டுப் பிற்பாதியில் அது குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  

Top