Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வட்டாரங்களின் அபாய நிலைக்கு ஏற்ப எல்லைகள் திறக்கப்படலாம் : போக்குவரத்து அமைச்சர் ஓங்

 வட்டாரங்களின் அபாய நிலைக்கு ஏற்ப  எல்லைகள் திறக்கப்படலாம் : போக்குவரத்து அமைச்சர் ஓங்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரும், ஹாங்காங்கும் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையற்ற விமானப் பயணத்துக்குத் தயாராகிவரும் நிலையில், இருதரப்பும் கிருமிப்பரவல் சூழலை அணுக்கமாய் கவனித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்புத் தடையற்ற பயண நடைமுறை, வரும் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது.

மிகுந்த எச்சரிக்கையுடன் தொடங்கப்படும் அந்த ஏற்பாட்டைத் தேவைப்பட்டால், தற்காலிகமாக முடக்குவது போன்ற பாதுகாப்புத் திட்டங்களும் இருப்பதாக இரு தரப்புத் தலைவர்களும் கூறியுள்ளனர்.

சமூக அளவிலான கிருமிப்பரவல் சிங்கப்பூரில் சற்றே அதிகரித்துவரும் நிலையில், அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு வட்டாரங்களின் அபாய நிலைக்கு ஏற்ப, எல்லைகளைத் திறக்க வேண்டியிருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.

உள்நாட்டில் நோய்ப்பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பகுதிகளுடன் மிகுந்த எச்சரிக்கையோடு எல்லைகளைத் திறக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது; அதேவேளை, நோய்ப்பரவல் அதிகமுள்ள இடங்களுக்குக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும்.

அதுவே சிறந்த வழி என்றார் திரு. ஓங்.

உலக நாடுகள் அந்த அடிப்படையில் செயல்பட்டால், விமானப் போக்குவரத்து இந்த ஆண்டு பாதுகாப்பான முறையில் செயல்படத் தொடங்கச் சாத்தியமுள்ளது என்றார் அவர்.

தடுப்பூசிகள், எதிர்பார்த்த பாதுகாப்பைத் தருகின்றன என்பதை அவர் சுட்டினார்.

கிருமிப்பரவல் தீவிரமடைந்தால், பயண நடைமுறையில் தேவையான மாற்றங்களைச் செய்ய இரு தரப்புகளும் தயாராய் இருக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டது.

21ஆவது ஆசிய - பசிபிக் பொருளியல் ஒத்துழைப்புக் கூட்டத்தில் திரு. ஓங் பேசினார்.

இணையம் வழியே நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் வர்த்தகத் தலைவர்களும், அரசாங்க அதிகாரிகளுமாகச் சுமார் 400 பேர் பங்கேற்றனர்.

பயணம் வழக்கநிலைக்குத் திரும்பும்போது அதில் மின்னிலக்கச் சுகாதாரக் கடப்பிதழ், தடுப்பூசி போன்றவற்றின் பங்களிப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்