Images
  • Tution
    TODAY/Faris Mokhtar

சாதாரண நிலைத் தேர்வுகளில் 6 மாணவர்களுக்கு உதவிசெய்த மோசடியில் துணைப்பாட ஆசிரியருக்குச் சிறை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சாதாரண நிலைத்தேர்வுகளில் ஆறு மாணவர்களுக்கு உதவிசெய்யும் மோசடியில் சம்பந்தப்பட்ட துணைப்பாட ஆசிரியருக்கு மூன்று ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

33 வயது சிங்கப்பூரரான டான் ஜியா யான் (Tan Jia Yan ), 27 மோசடிக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

Zeus துணைப்பாட நிலையத்தின் தலைமையாசிரியர் உள்பட மற்ற மூன்று ஊழியர்கள் அந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருந்தனர்.

அந்த நால்வரும் சீனாவிலிருந்து வந்த ஆறு மாணவர்களுக்கு 2016ஆம் ஆண்டு சாதாரண நிலைத் தேர்வுகளில் உதவியிருந்தனர்.

தலைமையாசிரியரான 52 வயது போனி போ யுவான் நீ (Pony Poh Yuan Nie) மாணவர்களுக்குத் தேர்வுகளின்போது உதவி செய்வதற்கு, 1000 வெள்ளியிலிருந்து 8,000 வெள்ளி வரை ஒரு சீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றிருந்தார்.

தேர்வுகளின்போது திறன்பேசிகளுடன் இணைக்கப்பட்ட சிறிய கருவிகளை உடலில் மறைத்துவைத்து, தேர்வுக் கேள்விகளையும் அதன் பதில்களையும் அவர்கள் பரிமாறிக்கொண்டனர்.

அந்த மோசடி ஒரு வாரம் தொடர்ந்து நடத்தப்பட்டது.

தெம்பனிஸ் உயர்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவரைத் தேர்வுக் கூடக் கண்காணிப்பாளர் சந்தேகப்பட்டுப் பரிசோதனை செய்தபோது உண்மை வெளிவந்தது.
 

Top