Images
  • URBAN FARMING (1)

தொழிற்பேட்டைகளில் பண்ணைகள் அமைக்கும் முன்னோடித் திட்டம் 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும்

தொழிற்பேட்டைகளில் பண்ணைகளை அமைக்கும் முன்னோடித் திட்டம் 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திட்டம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து சுமார் 30 பண்ணைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

தொழிற்பேட்டைகளில் இயங்குவது செலவைக் குறைப்பதாகவும் வாடிக்கையாளர்களைச் சுலபமாகச் சென்றடைய முடிவதாகவும் பண்ணைகள் கூறுகின்றன.

ஆனால் தொழில்துறையை மேம்படுத்தக் கூடுதல் முயற்சிகள் எடுக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

அட்மிரல்ட்டி வட்டாரத்திலுள்ள தொழிற்பேட்டையில் அமைந்திருக்கும் இந்தப் பண்ணை மாதந்தோறும் சுமார் 5 டன் காய்கறிகளை உற்பத்தி செய்கிறது.

வெப்பநிலை உகந்ததாக இல்லாதபோதும் குளிர் பிரதேசங்களில் தழைக்கும் கேல் கீரை, ஸ்ட்ராபெரி போன்றவை இங்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு வளர்கின்றன.

சிங்கப்பூரின் நிலப்பரப்பில் 1 விழுக்காடு மட்டுமே தற்போது விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் 31,000 டன் உணவு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது.

சிங்கப்பூரின் உணவுத் தேவையில் அது 10 விழுக்காட்டுக்கும் குறைவு.

போதுமான உணவு உள்நாட்டிலேயே உற்பத்தியாவதை உறுதிசெய்ய அரசாங்கம் தொழிற்பேட்டைகளில் பண்ணை அமைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

சுமார் 9,400 சதுர மீட்டர், அல்லது ஒன்றரை காற்பந்துத் திடல் பரப்பளவிலான இடம் பண்ணைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அரசாங்க அமைப்புகளிடமிருந்து ஒப்புதல் பெற்று பண்ணையை அமைக்க கிட்டத்தட்ட ஓராண்டு ஆகும்.

சிங்கப்பூரின் உணவுத் தேவையில் 30 விழுக்காட்டை 2030ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டிலேயே உற்பத்திசெய்ய வேண்டுமானால், நடைமுறைகள் துரிதப்படுத்தப்படவேண்டும் என்கின்றன பண்ணைகள்.

2021ஆம் ஆண்டு சுங்கை காடுட்டில் திறக்கப்படவிருக்கும் விவசாய-உணவுப் புத்தாக்க நிலையம் அதற்கு வழியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Top