Images
  • u1
    படங்கள்: சிவசங்கர்

உறுமி மேளத்தை முப்பரிமாண அச்சு இயந்திரத்தில் சோதனை முயற்சி மூலம் தயாரிக்கும் சிங்கப்பூரர்

உறுமி  மேளத்தை முப்பரிமாண அச்சு இயந்திரத்தில் தயாரித்துள்ளார் உள்ளூர்க் கலைஞர் சிவசங்கர்.

சிறு வயதிலிருந்ததே உறுமி  மேளத்தை வாசிக்கும் 32 வயது சிவசங்கர் சுற்றுச்சூழலைக் கருந்தில் கொண்டு எடுத்த அந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

புது முயற்சியைப் பற்றி சிவசங்கர் "செய்தி"-யுடன் பகிர்ந்து கொண்டார்.

எப்படி இந்த யோசனை உங்களுக்கு தோன்றியது ?

தற்போது COVID-19 சூழலால் வெளிநாடுகளுக்குச் சென்று இசை வாத்தியங்களை வாங்க முடியாமல் போனது.

என்னிடம் வந்து பலர் உறுமி மேளம் வாங்குவது தொடர்பாகப் பேசினார்கள்.

முப்பரிமாண அச்சு இயந்திரத்தைப் பற்றி எனக்கு விவரங்கள் தெரியும். அதில் இதற்கு முன் சிறு சிறு பொருள்களைச் செய்த அனுபவம் இருந்தது. 


போதிய வளங்களும் நேரமும் இருந்ததால் ஒரு சோதனை முயற்சியாக உறுமி மேளத்தைத் தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.

இப்போது அந்த முயற்சி சிறு வெற்றியைத் தந்துள்ளது.

என்னென்ன சவால்கள் இருந்தன ?

எனது குறிக்கோள் முதலில் உறுமி  மேளத்தைத் தயாரிப்பது.

அதன் பின் அது எவ்வளவு நாள் உழைக்கும் என்பதை ஆராய்வது.

முதலில் செய்த இரண்டு சிறிய ரக உறுமி மேளங்கள் அச்சிடும் போதே உடைந்தன.

பின் கூடுதலான தொழில்நுட்ப முயற்சிகளைப் பயன்படுத்தி வடிவத்தைத் தயார் செய்தேன்.

விலையுயர்ந்த இயந்திரம் வாங்கினால் தரமான பொருளை உருவாக்கலாம், அதனால் வளங்கள் அதிகமுள்ள இயந்திரத்தை வாங்கினேன்.

அதைத்தொடர்ந்து முப்பரிமாண அச்சு இயந்திரத்தில் முதல் மேளம் உருவானது.


உறுமி  மேளம் செய்ய எத்தனை நாள்கள் ?

நம்மிடம் முப்பரிமாண அச்சிற்கான சரியான படம் இருந்தால் ஒரு வாரத்திற்குள் பொருளை செய்து முடிக்கலாம்.

இருப்பினும் பொருளுக்கும் வளங்களுக்கும் ஏற்றவாறு நேரம் மாறும்.

இந்த முயற்சி எதிர்காலத்தில் உறுமி  மேளத் தயாரிப்பில் மாற்றத்தைக் கொண்டுவருமா ?
உறுமி  மேளங்கள் விலங்கின் தோல்களினாலும், மரக்கட்டைகளாலும் செய்யப்படுபவை, இந்தப் புது முயற்சி
சுற்றுச்சூழலுக்கு நம்மால் முடிந்த ஒரு உதவியாக இருக்கும்.

இன்னும் சோதனைக் கட்டத்தில் உள்ளதால்
எதிர்காலத்தைப் பற்றி அவ்வளவாகக் கூறமுடியவில்லை 

என்ன விலையை எதிர்பார்க்கலாம் ?

மரக்கட்டைகள், விலங்குத் தோல்களில் ஆன உறுமி மேளத்தின் ஆரம்ப விலை 600 வெள்ளி, உயர்தரமானது 1,500 வெள்ளி.

முப்பரிமாண அச்சு இயந்திரத்தில் செய்யும் உறுமி மேளத்தின் விலை சுமார் 200 வெள்ளிக்குள் தான் இருக்கும்.

ஆரம்பக்கட்டச் சோதனை என்பதால் அதன் தரம் சற்றுக் குறைவாக உள்ளது, உடையும் வாய்ப்பும் உள்ளது.

சத்தம், நீண்டநாள் உழைப்பு போன்ற அம்சங்களை நாளடைவில் அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது 


சுமார் 16 ஆண்டுகளாக உறுமிமேளத்தை வாசிக்கும் சிவசங்கர், சிவமயம் உறுமிமேளம் என்னும் வாத்தியக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.  

Top